பெருந்தோட் குறுஞ்சாத்தனார் (308): சினை, வடிவுகளால் இவருக்கு இப்பெயர் வந்தது என்பர். வாழையால் யானை மதன் அழியும் என்பதும், யானையின் மத்தகம் தெய்வத் தன்மை பொருந்தியது என்பதும் இவர் பாட்டால் தெரிய வருகின்றன.
பெரும் பதுமனார் (7): உயர்ந்த கருத்து அமைந்த செய்யுள் செய்தலில் இவர் வல்லவர். ஆரியக் கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடுவதும், அப்பொழுது பறை கொட்டுவதும் இவரால் கூறப்பட்டுள்ளன. மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யும் வழக்கம் இவரால் குறிக்கப்படுகின்றது. இவர் தலைவனது உள்ளத்திற்குத் தலைவி இடியை உவமை கூறுவதாக (நற். 2) அமைத்துள்ளார். “ஆல மரத்தின் பழங்களை நேற்று உண்டோமே என்று நினையாமல் புள்ளினங்கள் மீட்டும் அம்மரத்தின் பாற் செல்லுதலைத் தவிரா; இரவலரும் அத்தன்மையரே; தம்மை ஆதரிப்போர் செல்வமே இவர் செல்வம்; அவர் வறுமையே இவர் வறுமை” என்பது இவர் கூறும் உயர்ந்த கருத்தாகும் (புறநா. 199). இவர் செய்த வேறு பாடல்கள்: 3 (நற். 1; புறநா. 2)
பெரும்பாக்கனார் (296): பெரும்பாக்கம் என்பது ஓர் ஊர். நாரைகள் கழியில் உள்ள சிறு மீன்களை வெறுத்து வயலின் கண்ணுள்ள நெய்தல் மலர்களையும் நெற் கதிர்களையும் விரும்பும் என்று இவர் கூறியுள்ளார்.
பேயனார்(233, 359, 400): முல்லைத் திணை வளங்களை விளங்கப் பாடுதலில் இவர் மிக்க ஆற்றல் உடையவர். ஐங்குறு நூற்றின் ஐந்தாவது நூறாகிய முல்லைத் திணையைப் பாடியவர் இவரே; குறுந்தொகைச் செய்யுட்கள் மூன்றும் முல்லைத் திணையைப் பற்றியனவே. அகநா. 234 இவர் செய்தது.
பேயார் (339): யாப்பருங்கல விருத்தி உரையில், “கறைப்பற் பெருமோட்டு” என்னும் வெண்பா மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெற்று, “இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது” என்று எழுதி இருத்தலால் காரைக்கால் பேயார் என்னும் பெயருடைய ஒரு புலவர் இருந்ததாகத் தெரிகிறது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ யாதும் விளங்கவில்லை. அகிற் புகைக்கு மழை பெய்து விட்ட வெண் மேகத்தை இவர் உவமை கூறியுள்ளார்.