பேரிசாத்தனார் (81, 159, 278, 314, 366): வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்பவரும் இவரும் ஒருவர் போலும், “தென்கடல், முழங்குதிரை முழவின் பாணியிற் பைபயப், பழம்புண் ணுறுநரிற் பரவையி னாலும்” (நற். 378) என்று கடல் அலையின் ஒலிக்கு முழவின் ஒலியை உவமை கூறிய சிறப்பால் இவர் பெயர்க்கு முன் “பேரி” என்னும் அடை கொடுக்கப்பட்டது போலும்; பேரி - முழவு. அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவையும் செறிவால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளையும் உவமை கூறியுள்ளார்; 81. “நீயும் நின் புதல் வரும் அவர் பெறும் புதல்வரும் நீடு வாழ்க”என்று இவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனென் பானைக் கூறும் பகுதி (புறநா. 198)மிக்க நயமுடையது. “விதியே தலைவியைத் தலைவனோடு கூட்டுவித்ததன்றித் தலைவனுடைய சால்பை அளந்தறிதற்கு நாம் யார்?” என்ற கருத்து அமைந்த பாடல் ஒன்று (366) இவர் இயற்றி உள்ளார். இவர் இயற்றிய வேறு பாடல்கள்:நற். 8; புறநா. 1.
பேரெயின் முறுவலார் (17): புன்முறுவலால் திரிபுர மெரித்த கண்ணுதற் பெரு மானின் பெயரை உடையவர் இவர்; எயில் - முப்புரங்கள். சோழ நாட்டில் காவிரியின் தென் கரையில் பேரெயில் என்று தேவாரம் பெற்ற ஒரு ஸ்தலம் உண்டு. இவர் அவ்வூரினரோ என்றும் கருதலாம். நம்பி நெடுஞ்செழியன் என்பான் இம்மையில் தான் அடைதற்குரிய இன்பங்களை எல்லாம் அடைந்தான் என்றும், செய்ய வேண்டிய நற் காரியங்களை எல்லாம் வழுவின்றிச் செய்தான் என்றும் இவர் அவனைப் பாடியிருக்கும் பகுதிகள் அறியற்பாலன. இவர் இயற்றிய வேறு செய்யுள் புறநா. 239.
பொதுக் கயத்துக் கீரந்தையார்(337): கீரந்தையார் என்ற புலவர் சிலர் உண்டு. பொதுக்கயம் என்பது ஓர் ஊர். அவ்வூரினர் இவர். பருவம் வாய்த்த மகளிர்க்குரிய இயல்புகளை இவர் பாடல் தெரிவிக்கின்றது.
பொன்மணியார் (391): கார் காலத்தில் மயில்கள் கூவுவது தலைவிக்கு வருத்தத்தைத் தரும் என்று இவர் குறித்துள்ளார். இவர் ஒரு பெண்பாற் புலவர்.
பொன்னாகனார்(114): தலைவியைத் தலைவனோடு கூட்ட வேண்டி அவளின் நீங்கித் தலைவனுக்கு ‘இன்னுழி எதிர்ப்படுதி’ என்று தோழி கூறுவதாக உள்ள ஒரு செய்யுள்