இவர் செய்தது. தலைவன் தலைவியிடம் விரைந்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்க, “செலவியங் கொண்மோ வல்கலும், ஆர லருந்த வயிற்ற, நாரை மிதிக்கு மென்மகணுதலே” என்று அமைத்திருப்பது நயம்பட உள்ளது.
மடல் பாடிய மாதங்கீரனார் (182): மடலேற்றத்தைப் பற்றிய செய்தியைத் தம் செய்யுளில் சொல்லுதலின் மடல் பாடிய என்னும் அடைமொழி இவரது பெயரின் முன் வைக்கப் பட்டுள்ளது. “தெருவில் மடலேறி வருவதே அவள்பால் நாம் விடற்கமைந்த தூது” என்பது தலைவன் கூற்று. நற். 377-ஆம் செய்யுளும் இவர் பாடியதே. தலைவன் மடலேறுவேன் என்று தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவே அச் செய்யுளும் அமைந்துள்ளது.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் (233): தலைவியும் தோழியும் பெரிய ஊரின்கண் நிகழ்ந்த விழாவிற்குச் சென்று தலைவனை எதிர்ப்பட்டு அளவளாவிய நிகழ்ச்சியைத் தலைவி நினைவுறுத்தியதாக இவர் செய்யுள் அமைந்துள்ளது.
மதுரைக் கண்டரதத்தன் (317): பனிக் காலத்தில் வாடைக்கு அழிந்த மேகம் தென்றிசை நோக்கிச் செல்லும் இயற்கையை இவர் அறிந்து கூறியுள்ளார்.
மதுரைக் கண்ணனார் (107): பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால், “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே, நீ இறந்து படுவாயாக” என்று கூறுவதாக இவர் பாடியுள்ள செய்யுள் நயம் வாய்ந்த ஒன்றாம்.
மதுரைக் கதக்கண்ணனார்(88): கோபம் மிக்க கண்களை உடையவர் என்பது கதக் கண்ணனார் என்பதன் பொருள்; “செல்வப் போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி” (யா.கா.மேற்) என்ற அடியை நோக்குக. “அரிய வழியை அஞ்சாது தலைவன் நள்ளிரவில் வருதலும் வருவான்; அவன் அங்ஙனம் வருதலினால் உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்” என்று தோழி கூறுவதாக இவர் பாடியுள்ளார்.
மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் (164, 173, 302): இந்த மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பன போலும். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சி என்னும் நூலைப் பாடிய காரணமாக மாங்குடி மருதனார் என்பார்