குறுந்தொகை


clvi


கண்ணகியின் வரலாற்றையும் அவள் மேம்பாட்டையும் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தி அவனைக் கொண்டு அவளுக்கு ஒரு கோயில் கட்டுவித்து நித்திய பூசை முதலியன நடக்கும்படி செய்தனர். கண்ணகியின் வரலாற்றை அவனுடன் கேட்டவரும் அவன் சகோதரரும் துறவு பூண்ட வருமாகிய இளங்கோவடிகள் அவளுடைய சரிதத்தைப் பொருட்டொடர் நிலைச் செய்யுளாகச் செய்தற்கு வேட்கை அடையும் வண்ணம் செய்தவர் இவரே. அதுவே சிலப்பதிகாரம். அதைக் கேட்டவரும் இவரே. மணிமேகலையின் ஆசிரியர் இவர். குறுந்தொகைச் செய்யுளையன்றி எட்டுத் தொகையில் இவர் செய்தனவாக உள்ள செய்யுள்கள்-9 (நற். 3; அகநா. 5; புறநா. 1). திருவள்ளுவ மாலையிலும் இவர் செய்யுள் ஒன்று உண்டு. மருத்துவன் தாமோதரனாரும் இவரும் நெருங்கிய நட்பினர். சேரன் செங்குட்டுவன் பாலும் இளங்கோவடிகள்பாலும் இவர் மிக்க அன்புடையவர். காஞ்சி, வஞ்சி, காவிரிப் பூம்பட்டினம் இவற்றைப் பற்றி இவர் விரிவாகக் கூறியுள்ளார்.

    மதுரை நல்வெள்ளியார்(365): இவர் பெண்பாற் புலவர். வெள்ளியார் என்னும் சுக்கிரனுக்குரிய பெயர் இவருக்காயிற்றுப் போலும். இவர் அருவியின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமை கூறியுள்ளார் (365). “தலைவன் புரவலனைப் போலத் தோன்றி இரவலனைப் போலப் பணி மொழிகளைப் பயிற்றினான்” என்று தோழியின் கூற்றில் இவர் அமைத்த பாடல் ஒன்று அகநானூற்றில் (32) காணப்படுகிறது.

    மதுரைப் பெருங் கொல்லனார் (141): இவருக்கு இப்பெயர் தொழிலால் அமைந்தது. இரவுக் குறி நிகழ்ந்த பின்னரும் தலைவற்குப் பகற்குறி நிகழும் என்பது இவர் வாக்கால் தெரிகிறது. பழைய கருத்து இரவுக் குறியையே அன்றிப் பகற்குறியையும் தலைமகள் மறுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

    மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தனார் (332): மருதங்கிழாரின் மக்கள் இளம் போத்தனார், பெருங்கண்ணனார், சோகுத்தனார் என்பவர்களின் பாடல்கள் தொகை நூல்களில் வந்துள்ளன. அவர்களுள் இளம் போத்தன் என்பவர் மூவரில் இளையவர் போலும். குறுந்தொகையில் மட்டும் இவர் பாடல் உள்ளது. வாடைக் காலத்தே சில் பெயல் இருக்கும் என்றும் அக் காலத்தின் கடைசி நாளில் காம நோய் நீந்துதற்கரிதென்றும் இவர் புலப்படுத்தியுள்ளார்.