கவர்வன. நிலங்களின் இயல்புகளை நன்கு அறிந்து பாடியவர். இவர் பாடிய வேறு செய்யுட்கள்: 33 (நற். 10; அகநா. 21; புறநா. 2)
மதுரை யளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் (188, 215): அளக்கர் ஞாழல் என்பது ஓர் ஊர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல். பாண்டிய அரசரால் முதலில் இவர் பாதுகாக்கப் பெற்றவர். சுக்கிரன் வானத்தில் தென்பாற் காணப்படின் மழை குறையும் என்று இவர் அறிந்திருந்தனர் (புறநா. 388:1-2, 15-6). இவரால் பாடப்பட்டோன் சிறுகுடி கிழான் பண்ணன் என்பவன். இவர் சேனைத் தலைவர் என்பதற்கியையத் தம் பாடல்கள் சிலவற்றில் போர்க்களத்தில் பெறும் வெற்றியைச் செல்வம் என்று குறித்திருக்கிறார் (அகநா. 144, 174); வினை முடித்து மீளும் தலைமகன் பாகனொடு கூறும் கூற்றே இவர் கவிகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. புலியின் உபத்திரவத்தில் இருந்து பிடியைக் களிறு காப்பது இவரால் கூறப்பட்டுள்ளது (215). இவர் பாடிய வேறு பாடல்கள் 10 (நற். 2; அகநா. 7; புறநா. 1)
மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் (185): இவர் ஆடைவிற்கும் வணிகர்; அறுவை - ஆடை. கீழ்க் காற்றால் வீழ்த்தப்பட்ட காந்தள் மலர் பாறையின்மேல் கவிந்து கிடப்பது பாம்பு படம் ஒடுங்கிக் கிடப்பது போலும் (185) என்றும் செவிலியர் பாராட்டப் பொலஞ் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி மணல்மலி முற்றத்து நிலம் வடுக்கொளாமல் விளையாடு ஆயத்துச் சிறாரைத் தலைவி காணுந்தோறும் தன்னை நினைந்து வருந்துவள் என்று வினைமுற்றிய தலைவன் தேர்ப் பாகனுக்குக் கூறுவதாகவும் (அகநா. 254) இவர் பாடியுள்ளார். மேலும் தலைவன் தன் மின்னொளிர் எஃகமே செல்நெறி விளக்க நள்ளிரவில் வருவான் என்றும் (அகநா. 272) தினைப் பயிர் கரும்பு போலக் கவினித் தோன்றும் (அகநா. 302) என்றும் பாராட்டி உள்ளார். வேட்டனார் என்ற பெயர்க் காரணம் புலப்படவில்லை. இவர் செய்தனவாக நற்றிணையில் 1-ம், அகநானூற்றில் 6-ம், புறநானூற்றில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாக 9 செய்யுட்கள் காணப்படுகின்றன.
மதுரை யாசிரியர் கோடங் கொற்றனார்(144): ஆசிரியர் என்றதனால் இவர் கணக்காயர் போலும். மகள் போக்கிய செவிலித் தாயின் கூற்றாக இவர் பாடிய செய்யுள் நயம் உள்ளதாகும்.