பாங்கற்குக் கூறியதாக இவர் செய்த இவ்வொரு பாடலே இப்பொழுது கிடைத்துளது.
மாடலூர் கிழார் (150): இவர் வேளாண் மரபினர். இவர் ஊர் மாடலூர். மரத்தின் உச்சியில் பரணின் மீது குறவர் இரவில் வாசனை உள்ள மரங்களை எரித்து விளக்கம் செய்யும் வழக்கம் இவரால் கூறப்பட்டுள்ளது.
மாதிரத்தர் (113): இப்பெயர் மாதீர்த்தன் என்றும் மாதீரத்தன் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. பெண்கள் கூந்தலின் எண்ணெயைப் போக்கிக் கொள்ள மண்ணை அப்பித் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இவரால் கூறப்பட்டிருக்கிறது.
மாமலாடனார் (46): இப்பெயர் மாமிலாடன் என்றும் பிரதிகளில் காணப்படுகிறது. மலாடு என்பது கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டில் ஒன்று. அதனைச் சேர்ந்தவர் இவர். வாடிய ஆம்பல் மலருக்குக் கூம்பிய சிறகுகளை உடைய மனையுறை குருவியை இவர் உவமை கூறியிருக்கிறார்.
மாமூலனார்(11): இவர் அந்தணர்; இவரை யோகி என்றும் கொள்ளுதல் பொருந்தும். இது தொல். பொருள். 75-ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர், “யோகிகளாய் உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் றேயத்து அனைநிலை வகையோராவர்” என்று பார்ப்பன வாகையை விளக்குவதனால் விளங்குகிறது. மாமரத்தடியில் இருக்கும் ஏகாம்பர நாதன் பெயரே மாமூலர் என்று வழங்கியது போலும். இவர், “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர், சீர்மிகு பாடலி” என்று நந்த மன்னரையும் (அகநா. 255), மோரியரையும் (அகநா. 251, 281) பாராட்டி இருப்பதனால் அவர்கள் காலத்தவராகக் கருதப் பெறுகிறார். அவர்கள் காலம் கி.மு. 260 ஆண்டுகளுக்கு முன் என்பர். பாலைத் திணையையே இவர் மிகுதியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அங்கங்கே இவர் உபகாரிகளாகிய புல்லியையும் அவனது வேங்கட மலையையும் (அகநா. 61, 265, 295, 311, 359, 393) நெடு வேளாவியையும் (அகநா. 1, 61), நன்னனையும் அவன் ஏழிற் குன்றத்தையும் (அகநா. 15, 349), நன்னன் வேண்மான் என்பவனுடைய வியலூரையும் (அகநா. 97), மற்றும் வடுகத் தலைவராகிய கட்டி, எருமை என்பவர்களையும் அஞ்சி கண்ணனெழினி, பாணன் என்ற வட நாட்டுத் தலைவன் முதலியவர்களையும் தம் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் பாடல்களில் இருந்து தெரியும் சரித்திரச் செய்திகள் பல: கரிகால் வளவனொடு