வெண்ணிப் பறந்தலையிற்பொருது தோற்றுப் புறப்புண் நாணி வடக்கிருந்த சேரலாதனொடு சில சான்றோரும் வடக்கிருந்து மாண்டனர் என்பதும் (அகநா. 55) சேரலாதன் கடலில் நாவாயைச் செலுத்தி ஓர் அரசனுடைய கடம்பை அறுத்து அதனைக் கொண்டு செய்வித்த முரசினொடு இமயங்காறும் சென்று அம் மலையின் மீது விற்பொறித்து வந்து பகைவர் தந்த திறை அனைத்தையும் தன் வாயில் முன் குவித்துப் பிறர் முகந்து போகச் செய்தனன் (அகநா.127) என்பதும், மத்தி என்பவன் எழினியின் மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்று அவன் தன் பற்களைக் கொணர்ந்து தன் வாயில் கதவில் அழுத்தினான் (அகநா. 211) என்பதும், உதியஞ்சேரல் (பாரதப் படைவீரருக்குப்) பெருஞ்சோற்றை வழங்கியபோது கூளிச்சுற்றம் எஞ்சிய சோற்றை உண்ண அங்கு வந்து குழுமி இருந்தன (அகநா. 233) என்பதும், எவ்வி என்ற உபகாரி செருவில் இறந்துபட வருத்தம் பொறாத பாணர் அவ்விடத்தே தம் யாழை முறித்துப் போட்டு அன்று காறும் அவ்வியாழ் தமக்கு வயிற்றுப் பிழைப்புக்குப் காரணமாக இருந்தமையின் அதனைத் தொழுது அவலித்தார்கள் (அகநா. 115) என்பதும் இவர் காட்டும் கதைகளில் ஒரு சிலவாம். இவர் கவிகளில் இங்ஙனம் வரலாறுகளே பெரிதும் காணப்படுகின்றன. இவர் இயற்றியனவாக இப்பொழுது கிடைத்துள்ள பாடல்கள்: 30 (நற். 2; குறுந். 1; அகம். 26; திருவள்ளுவ மாலை. 1). இவர் இலக்கண நூல் ஒன்று செய்துள்ளதாக இலக்கண விளக்கம் முதலியவற்றால் தெரிய வருகிறது.
மாயெண்டனார்(235): இவர் பாம்பின் உரியை அருவிக்கு உவமை கூறுகிறார். தலைவியைப் பாதுகாக்குமாறு தலைவன் வாடையை வேண்டுவதாக இவர் செய்யுள் அமைந்துள்ளது.
மாலை மாறனார்(245): வாள் போன்ற வாயை உடைய மடல்கள் செறிந்த தாழை வேல்நாட்டும் வேலியைப் போலப் பயன் தரும் கடற்கரை என்று இவர் கூறுவதில் இருந்து வேல்களை வேலியாக நடும் வழக்கம் உண்டு என்று தெரிகிறது. மாறன் என்ற பெயர் இவர் பாண்டிய மன்னனாக இருக்கலாமோ என்று கருத இடம் தருகிறது.
மாவளத்தனார் (348): இவர் தலைவியின் வாட்டத்திற்கு யானையின் கொம்பினால் முறிந்து கிடக்கும் முல்லைக் கொடியை உவமை கூறியுள்ளார். சோழன் நலங்கிள்ளியின்