தம்பி மாவளத்தன் என்ற பெயருடைய ஒருவன் புறநா. 43-ஆம் செய்யுளில் கூறப்படுகிறான்.
மிளைக்கந்தனார் (196): மிளை என்பது ஓர் ஊர். மிளைப் பெருங்கந்தனார் என்ற பெரிய புலவர் ஒருவர் பாடிய கவிகள் இத்தொகை நூலில் வந்துள்ளன. அவர் வேறு, இவர் வேறு. “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோரமுதம் புரையுமாலெனக்கு” என்று தலைவன் தலைவியைப் பாராட்டுவான் என்ற இலக்கணத்திற்கு இவர் பாடல் உதாரணமாக விளங்குகின்றது. பாரி வள்ளலின் பறம்பு நாட்டில் உள்ள சுனை நீரின் இனிமை இவரால் புகழப்பட்டு உள்ளது. அதனால் அவ்வுபகாரியால் ஆதரிக்கப் பெற்றாருள் இவரும் ஒருவர் என்று கொள்ளக் கூடும். கந்தனார் என்பது இவருக்கு இடப்பட்ட தெய்வப் பெயர்.
மிளை கிழான் நல்வேட்டனார் (341): இவர் வேளாண் மரபினர். நல்வேட்டனார் என்று வேறு அடை இன்றியும் இவர் பெயர் காணப்படுகின்றது. “பெரியோர் கண்ணிய ஆண்மை கடவதன்று” (341), “நெடிய மொழிதலும் கடிய வூர்தலும், செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே, சான்றோர் செல்வமென்பது சேர்ந்தோர், புன்கண் ணஞ்சும் பண்பின், மென்கட் செல்வம் செல்வமென் பதுவே” (நற். 210)என்பன இவர் கூறும் நீதிகள் ஆகும். கான்யாற்றுப் புது வெள்ளத்தில் தலைவி திளைத்தல் (நற். 53) இவரால் காட்டப் படுகிறது. மதியுடம் பாட்டின்கண் தலைவன் தோழியைப் பின்பற்றி ஒழுகுவதற்குப் போரிற்பட்ட வீரர் உயிர் போமளவும் அருகிருந்து பேய் வழிபாடு செய்தலை (பேய்க் காஞ்சியை) உவமை கூறியுள்ளார.் (நற். 349). நற்றிணையில் 4 செய்யுட்கள் இவர் பாடியவை.
மிளைப் பெருங் கந்தனார் (136, 204, 234): காமத்தின் இயல்பை இவர் வருணிக்கும் முறை அழகாக அமைந்துள்ளது (136, 204). “செவ்வானம் படர்ந்து ஒளி மழுங்கிய பொழுதில் முல்லை மலர்கின்ற காலத்தையே மாலைக் காலம் என்பர்; துணை பிரிந்தவர்களுக்கு விடியலும் பகற் காலமும் கூட மாலையாகும்” என்று தலைவி கூற்றில் (234) இவர் அமைத்திருக்கும் செய்யுள் அழகு அமைந்த ஒன்றாகும்.
மிளை வேள் தித்தனார்(284): இவர் உழுவித் துண்ணும் வேளாளர் மரபைச் சேர்ந்தவர். பாறையின் மீது செங்காந்தள் படர்ந்து மலர்ந்து இருப்பது போரில் புண்பெற்ற யானையின் முகத்தைப் போன்றதாக இவர் கூறியுள்ளார்.