திசையில் இருந்து வந்தவராக எண்ணப்படுகிறார். புறநானூற்றில் (172) பிட்டங் கொற்றனை இவர் பாடுங்கால், “பிட்டன் வேலும், அவன் மாறுகொள் மன்னரும் வாழ்க” என்று கூறுகிறார். பகை மன்னரை அங்கு வாழ்த்தியது இவன் வென்று திறை கொள்ளல் அவருளராயின் என்பதனால். “தலைவன் பாணன் வாயில் யாரினும் இனியன் பேரன்பினன்” என்று தோழி தலைவனது அன்பின்மையைப் புலப்படுத்துவதாக இந்நூலுள் இவர் செய்யுள் அமைந்து உள்ளது. இவர் இயற்றிய வேறு செய்யுள் புறநா. 172.
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்: பேரி சாத்தனார் என்ற புலவரும் இவரும் ஒருவரே என்று கொள்ளல் அமையும். பேரி சாத்தனார் என்ற பெயரைப் பார்க்க.வருமுலை யாரித்தி (176): இவர் பெண்பாலார். நெஞ்சத்தின் கலக்கத்திற்கு மழை நீரின் கலக்கத்தை இவர் உவமை கூறியுள்ளார். தலைவனுக்குத் தேனிறாலை இவர் உவமை கூறி இருப்பது பாராட்டற்பாலது.
வாடாப் பிரபந்தர் (331): தலைவன் பொருள் தேடிச் செல்வதற்காகப் பிரிய எண்ணியதை நினைந்து வருந்திய தலைவியை நோக்கிய அவர் அங்ஙனம் செல்லார் என்று ஆற்றுவித்ததாக அமைந்துள்ளது இவர் செய்யுள்.
வாயிலான் தேவனார்(103, 108): வாயில் என்பது ஓர் ஊர். வாயிலிளங் கண்ணனாரும் இவ்வூரினரே. இந்த இரண்டு செய்யுட்களும் பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறும் கூற்றாக அமைந்துள்ளன.
வாயிலிளங் கண்ணனார்(346): “தலைவன் காலையில் வந்து தலைவிக்குக் குவளை மாலையைத் தந்தும், பகலில் தினையில் படுகிளி ஓப்பியும், மாலைப் பொழுதில் தன் நெஞ்சில் ஒன்றைக் கருதி வருந்தி, அக் கருத்தைச் சொல்லவும் எழுச்சி பெறாமல் குறைவுற்றான்” என்று தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியதாக இவர் பாடல் அமைந்துள்ளது.
விட்ட குதிரையார் (74): யானையால் பற்றி விடப்பட்ட மூங்கில் செருவில் செலுத்தி விட்ட குதிரையைப் போல மேலே எழும்பும் என்று உவமையை அமைத்தமையின் இச்சிறப்புப் பெயரால் இவர் வழங்கப்பட்டார்.
வில்லக விரலினார் (370): பரத்தையும் தலைவனும் ஒன்றுபட்டதற்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமை ஆக்கி, “வில்லக விரலிற் பொருந்தி” என்று பாடுதலின் இவர் இப்பெயரைப் பெற்றார்.