விற்றூற்று மூதெயினனர் (372): இப் பெயர் முத்தூற்று மூதெயினனார் என்றும் பிரதிகளில் காணப்படுகின்றது. விற்றூறு அல்லது முத்தூறு என்பது ஓர் ஊரின் பெயர். விற்றூற்று வண்ணக்கன் தத்தன் என்ற ஒருவரது பாட்டு நற்றிணையில் காணப்படுகின்றது. இவர் வேடர் மரபினர் என்பதும் முதுமையினால் கௌரவம் பெற்றவர் என்பதும் மூதெயினனார் என்ற தொடரால் தெரிய வருகிறது. தமிழருடைய திருமண முறை இவரால் மிக அழகாக வருணிக்கப் பெற்றுள்ளது (அகநா. 136). திங்களை உரோகிணி சேர்ந்த நாள் எல்லாக் குற்றமும் நீங்கிய நன்னாள் என்று இவர் கூறுவர். மணநாள் அன்று வாகை இலையையும் அறுகங் கிழங்கையும் நூலில் சேர்த்துக் கட்டி அதனை மணமகளுக்குச் சூட்டும் வழக்கமும் அன்றைய இரவிலேயே மணமகனையும் மகளையும் பள்ளியறைப் படுத்தலும் இவர் வாக்கால் தெரிய வருகின்றன. போர்த்தியுள்ள போர்வை கழித்ததும் வெளிப்படும் தலைவியின் தோற்றத்திற்கு இவர் உறை நீக்கிய வாளின் தோற்றத்தை உவமை கூறியிருப்பது பாராட்டத் தக்கது. இவர் இயற்றியனவாக அகநானூற்றில் மூன்று செய்யுட்கள் காணப்படுகின்றன.
வெண்கொற்றனார் (87): தன்னை வருத்தும் ஈயின் குரலோசையைக் கேட்ட அளவிலேயே பசுவானது நடுங்க அதன் கழுத்தில் உள்ள மணி ஒலிக்கும் என்று இவர் ஈயின்பால் பசுவிற்குள்ள அச்சத்தைப் புலப்படுத்தி அம்மணி ஓசை தலைவிக்குக் காம வேதனையை மிகுப்பதை இந்த ஒரு பாட்டில் காட்டி உள்ளார்.
வெண்பூதனார் (83): பலாப் பழத்தின் சுவைக்கு இவர் தமது வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்போர் பெறும் சுவையை உவமை காட்டி உள்ளார். தலைவனை மணமகனாக ஏற்றுக் கொள்ள இயைந்த செவிலியைத் தோழி, “அரும்பெற லமிழ்த மார்பத மாகப,் பெரும்பெய ருலகம் பெறீஇயரோ” என்று வாழ்த்துவதாக இவர் செய்யுள் அமைந்துள்ளது.
வெண்பூதியார்(97, 174, 219): வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார் என்பாரும் இவரும் ஒருவரே. பெயர் அளவில் பெண்பாலாக இருக்கலாம் என்று தோன்றினாலும் வெள்ளூர் கிழார் மகனார் என்று இருப்பதால் ஆண்பால் என்றே கொள்ள வேண்டும். இவர் வேளாண் மரபினர்; சைவ சமயத்தார்; பூதி - விபூதி; திருநீறு. இவருடைய செய்யுட்கள் மூன்றும் தலைவியின் கூற்றாகவே அமைந்துள்ளன. “யான் ஈண்டையேன், என் நலன் கானலிடத்தது, தலைவன் தன் ஊரினன், எம்மிருவருக்குமிடை நின்ற மறை அலராகி