குறுந்தொகை


clxvii


குடிமுறை தேரிற், கெடுநரு முளரோநங் காதலோரே” (130) என்று அழகுபட அமைந்துள்ளது. நச்சினார்க்கினியர் இச் செய்யுளை “செவிலி இடைச் சுரத்துச் சென்று தலைவியையும் தலைவனையும் தேடத் துணிந்து கூறினது” என்பர் (தொல். அகத்.சூ. 37). “காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே ... ... பிறரே” (குறுந். 44) என்பதும் செவிலியின் கூற்றே. இச் செய்யுள் மிகுந்த நயம் வாய்ந்தது. தன் காமநோய் பரவுதலைத் தலைவன் பாங்கனுக்குக் கழற்று எதிர்மறையில், “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற், கையிலூமன் கண்ணிற் காக்கும், வெண்ணெயுணங்கல் போலப், பரந்தன் றிந் நோய்’’ (58) என்று கூறும் பகுதியுள் அந்நோயைத் தடுக்கத் தன் செயலின்மை குறிக்கப்படும் முறை அழகிது. முன் காலத்தில் மணம் பேசப் பெரியோரை விடுத்தலும் தலையில் பாகையை அணிந்து மங்களகரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதும் தமிழ் நாட்டின் மரபு. இம் மரபு 146-ஆம் செய்யுளில் இவரால் கூறப்படுகிறது. அன்னி என்பான் குறுக்கைப் பறந்தலையில் திதியனுடைய காவர் மரமாகிய புன்னையைக் குறைத்த செய்தி இவரால் குறிக்கப்பட்டுள்ளது (அகநா. 45). நற்றிணையில் மூன்றும் அகத்தில் இரண்டும் திருவள்ளுவ மாலையில் ஒன்றும் இவர் பாடிய வேறு செய்யுட்களாகும்.

    வேட்டக் கண்ணனார்(389): இவர் சாதியில் வேடர் என்று தெரிகிறது; வேட்டம் - வேட்டை. இவர் தாம் வேடர் என்பதற்கியையத் தோழி கூற்றில், “தலை மகனுடைய குற்றேவல் மகன்”, “நெய்கனி குறும்பூழ் காயமாக, ஆர்பதம் பெறுக” என்று நெய்யிற் பொரித்த காடை இறைச்சியைக் கூறியுள்ளார். வேட்டக் கண்ணனார் என்பது கண்ணப்ப நாயனாரை நினைவுறுத்துகின்றது.

    வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் (362): வேம்பற்றூர் என்பது மதுரைக்கு வடகிழக்கில் இரண்டு காதத்தில் வையை நதிக்கு வடக்கே உள்ளது. பண்டைக் காலந்தொட்டுத் தமிழ் அறிஞர் வாழும் இடம் இது. இப்போது வேம்பத்தூர் என்று வழங்கப்படுகிறது. வேம்பற்றூர்க் குமரனார் என்பவரின் பாடல்கள் அகத்திலும், புறத்திலும் உள்ளன. இவர் கூத்தாடும் தொழிலை உடையவர். “வேல, நீ கொடுக்கும் பலியைச் சிலம்பன் ஒண்டாரகலமும் உண்ணுமோ” என்று தோழி கூற்றில் இவர் அமைத்துள்ள கருத்தைப் பிற்காலத்தவர் அங்ஙனமே எடுத்து ஆண்டனர் (தமிழ்நெறி. மேற். 104; பாண்டிக் கோவை; கிளவித் தெளிவு)

   
+~~~ *** ~~~+