பக்கம் எண் :

குறுந்தொகை


2


     (முடிபு) அடியையும் மேனியையும் ஒளியையும் உடுக்கையையும் வேலையும் சேவற் கொடியையும் உடைய முருகவேள் காப்ப உலகு ஏம வைகலை எய்தியது.

    (கருத்து) முருகக் கடவுளின் இத் திருவுருவைத் தியானம் பண்ணுக; பண்ணின் எல்லா நலமும் எய்தலாம்.

    (விசேட உரை)மங்கல மொழியாதலின் தாமரை முற்கூறப்பட்டது. காமர்-காமம் மருவு என்பதன் விகாரம் எனக் கொண்டு விருப்பம் மருவிய எனலுமாம்; “காமரு சுனைமலர்” (முருகு.75) என்பதன் உரையையும் அதன் அடிக் குறிப்பையும் பார்க்க. மேனி: ஆகுபெயர்; ‘மேனியென்றார் ஆகுபெயரால் நிறத்தை’ (சிலப். 5: 172, அடியார.்) குன்றென்றது சூரபன்மாவுக்கு அரணாகி அவனை உள்ளிட்டுக் கொண்டு ஓடி வந்த மலையெனலும் ஆம்; “ஒரு தோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப், பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ் பாடுவாம்” (தக்க.5) என்பதையும், ‘தனக்குப் பகைவனான சூரபன்மாவிற்கு மறைவாய் ஓடி வரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரே காலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளி’ என்னும் அதன் உரைப் பகுதியையும், “கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும், தொளைபட் டுருவத் தொடுவே லவனே” (கந்தரனுபூதி) என்பதையும் பார்க்க. நெஞ்சு- நடுவிடம். சேவல்-மயிற் சேவலுமாம்; ஆண் மயிலுக்குச் சேவல் என்னும் பெயர் வழங்குதல் மரபன்றாயினும், முருக வேளுடைய மயிலை அங்ஙனம் கூறுதல் பொருந்தும்; “சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும், மாயிருந் தூவி மயிலலங் கடையே” (தொல். மரபு.48) என்பதன் விசேட உரையிலுள்ள, ‘செவ்வேளூர்ந்த மயிலுக்காயின் அதுவும் நேரப்படும்’ என்னும் பேராசிரியர் கூற்றால் இது விளங்கும். முருக வேளுக்கு மயிற் கொடியும் உண்டு என்பது, “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ” (முருகு. 122) என்பதனாலும் அதன் அடிக் குறிப்பாலும் அறியப்படும். சேவலங் கொடியோனென்பது முருகன் என்னும் துணையாய் நின்றது. சேவலங்கொடியை உடம்படு புணர்த்தினார், “பழமுதிர் சோலை மலைகிழ வோனே” (முருகு. 317) என்றாற்போல. ஏமவைகல் - பிறவித் துன்பம் சாராத நாட்களெனினுமாம் (பரி. 17:53, பரிமேல்.) உலகு: ஆகுபெயர். எய்தின்று: கால வழுவமைதி.

     இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது.

     இது வாழ்த்து முதலிய மூன்றனுள் வருபொருள் உரைத்தல் என்பதன் பாற்படும்.

     இச் செய்யுள் அகப் பொருட்டுறைச் செய்யுள் தொகையாகிய இந்நூலுக்குப் புறத்துறுப்பாய்ப் புறப்பொருட் பாடாண்டிணையைச் சார்ந்த கடவுள் வாழ்த்து என்னும் துறையின் பாற்படும்.

    1 மேற்கோளாட்சி, அடி 1. ‘தாமரை ... சேவடியென்றவழி, சிவப்புடையன பலவற்றினும் தாமரை உயர்ந்ததாகலின் அஃது உவமையாகக் கூறப்பட்டது’ (தொல். உவம. 3., இளம்.); ‘தாமரை....

  
 1  
இந்நூற் செய்யுட்களும் செய்யுள் பகுதிகளும் பழைய
உரைகளில் மேற்கோளாக எடுத்து ஆளப்பட்ட இடங்கள்.