என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.
தலைவனால் தலைவி வரைந்து கொள்ளப்படாமையைப் புலப்படுத்துவர், 'மெல்லடி மேலவும் சிலம்பே' என்றார்; மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது. மெல்லடி என்றது இப்பாலையில் நடக்கலாற்றாள் என்னும் இரக்கக் குறிப்பைப் புலப்படுத்தியது. தூய்மை, அன்பு, உவகை முதலிய அகத்தியல்பை முகத்தால் அறிந்தமையின் 'நல்லோர்’ என்றார்.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.
பசுமையற முதிர்ந்ததாதலின் வெண்ணெற்றென்றார்.
ஏகாரங்களும் தாமென்பதும் அசை. மேலவும்: உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை.
மேற்கோளாட்சி1-2. செவிலிக்குக் கண்டோர் கூறியது (தொல். செய். 163,பேர்.);செய்யுளுள் பெயரின் ஈற்றயல் ஆகாரம் ஓகாரமானது (தொல். பெயர்.41,கல்.) 1-3. செய்யுளுள் பெயரின் ஈற்றயலாகாரம் ஓகாரமாயிற்று (தொல்.பெயர்.41, இளம், தெய்வச், ந; நன். 352, மயிலை; 353,சங்.)
மு. பெயரிடத்து ன, ள, ர ஈற்றயலாகாரம் செய்யுளில் ஓகாரமாக வந்தது (தொல். பெயர். 41, சே; இ.வி.326); வில்லோனும் தொடியோளும் என்பன பொருள் எனப்படும்; வேய்பயிலழுவம் முன்னியோரென்பது அப்பொருள் நிகழ்ச்சியான் இறந்த காலம் எனப்படும்; அப்பாட்டிற்குச்