(கருத்து) தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்.
(வி-ரை.) கால்யாத்த - கால்வாயின் வழியே கட்டப்பெற்றவென்பதும் பொருந்தும். கோடைக்காற்று நீரில்லாத மலர் வாடுதற்குஏதுவாகும். கவண்கவணை யெனவும் வழங்கும்: ‘’கடுவிசைக் கவணையிற்கல்கை விடுதலின்” (கலித். 41:10.) பொருது - பொர: எச்சத்திரிபு. அசாஅ: முதனிலைத் தொழிற் பெயர். உமணர் உப்புப்பார மேற்றியவண்டி பாலைநில வழியே செல்லும்; பாலைநிலத்திலுள்ள மரச்சினைக்குஅந்நிலத்திற் காணப்படும் உமணர் ஒழுகையையே உவமை கூறினாள்;
| " ........ ........ ........ உமணர் |
| கொடுநுகம் பிணித்த செங்கயிற் றொழுகைப் |
| பகடசாக் கொள்ளும் வெம்முனைத் கடொகுத் |
| தெறிவளி சுழற்று மத்தம்" (அகநா. 329:5-8) |
உமணரது வண்டிகளுக்கு மேற்கூடின்மையின் அவற்றை உலர்ந்த சினைகளுக்கு உவமை கூறினாள். யானை பட்டையை உண்ணவேண்டிச் சினையைப் பிளந்தது; அது முளிசினையாதலின் உறுதியுடையதாகிப் பாலையின் வெம்மையால் ஓய்ந்த யானையாற் பிளப்பதற்கு அரிதாயிற்று.
கானமும்: உம்மை இழிவு சிறப்பு. நும்மொடுவரின் கானமும் இனியவாமென்றதனால் நும்மொடு வாராளாயின் வீடும் இன்னாததாகுமென்பதும் பெறப்படும்; குறுந். 124:4.இதனால், “தலைவியின் மென்மை குறித்து அஞ்சாது உடன்கொண்டு செல்க” என்று அறிவுறுத்தினாளாயிற்று.
இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி.
(மேற்கோளாட்சி) மு. பாங்கி தலைமகனை உடன்படுத்தியது (நம்பி. 182)
ஒப்புமைப் பகுதி 1. நீர்க்குவளை: “தாழ்நீர்க்குவளையும்” (சிலப். 14:76)
2. கோடை ஒற்றல்: குறுந். 343:5.
1-2. ஒருவாறு ஒப்பு: குறுந். 368:6-8.
4. உமணருடைய வண்டிகள்: ‘’நோன்பகட்டுமணரொழுகை” (சிறுபாண்.55); “பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும்பாண். 63-5);“உப்பொ யுமண ரருந்துறை போக்கும், ஒழுகை நோன்பகடு”, “தெண்கழி விளைந்த வெண்க லுப்பின், கொள்ளை சாற்றிய கொடுநுக வொழுகை, உரனுடைச் சுவல பகடுபல பரப்பி, உமணுயிர்த் திறந்த வொழிக லடுப்பின்”, “வார்கயிற் றொழுகை நோன்சுவற் கொளீஇப், பகடுதுறை யேற்றத் துமண்விளி”, “உப்பொ யுமணரொழுகை” (அகநா. 3:5-6, 159:1-4, 173:9-10, 310:14):“உமணர், உப்பொ யொழுகை” (புறநா. 116:7-8).
5. முளிசினை: குறுந். 396:3
மு. | “தீயினும் வெய்ய வென்குவை யாயின் |
| யாவது மினிய கானம் |
| சேயுயர் சிலம்ப நின்னொடு செலினே” (தமிழ் நெறி.மேற்.90); |