பக்கம் எண் :

குறுந்தொகை


07


     4. காந்தளின் குருதிப்பூ: “தோடார் குருதி பூப்ப” (முல்லை. 96); “காந்தட்குருதி யொண்பூ”, “குருதி யொப்பின் கமழ் பூங் காந்தள்” (நற். 34:2-3, 399:2); “குருதி மலர்த்தோன்றி” (கைந்நிலை, 26.) குலைக் காந்தள்: “சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்’’ (குறுந். 239;3); ‘‘அகலிலைக் காந்தளலங்குகுலைப் பாய்ந்து”, “காந்தட், கமழ்குலை யவிழ்ந்த நயவருஞ் சாரல்”, “அலங்குகுலைக் காந்தள்” (நற்.185:8, 313:6-7, 359:2); “எடுத்த நறவின் குலையலங் காந்தள்” (கலித். 40:12); “பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள்” (அகநா. 108:15); “பூந்தண் சாரற் பொங்குகுலை யெடுத்த, காந்தட் கொழுமுகை” (பெருங்.2.12:67-8)

(1)
  
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.)
 2.    
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி  
    
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ  
    
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் 
    
செறியெயிற் றரிவை கூந்தலின் 
5
நறியவு முளவோநீ யறியும் பூவே. 

என்பது இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்றன (பி-ம். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழித் தலைமகன் தலைமகளை, இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற) தலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித்தனது (பி-ம். நிகழ்த்திப்பாடுமாற்றால் கூடிய தலைமகன் தனது) அன்பு தோற்ற நலம் பாராட்டியது.

    (இயற்கைப் புணர்ச்சி - ஊழ்வினையால் நேர்ந்த புணர்ச்சி. மெய் தொட்டுப் பயிறல் முதலாயின: மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்திரங்கல், கூடுதல் உறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல், தீராத் தேற்றம் என்பன; தொல். களவு. 11).

இறையனார்.

     (பி-ம்) 2. ‘கண்டன’.

    (ப-ரை.) கொங்குதேர் வாழ்க்கை - பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, காமம் செப் பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ - நீ கண்கூடாக அறிந்த