பக்கம் எண் :

குறுந்தொகை


701


துயர் கூர் காலை - துயரம் மிக்க பொழுதில், கயல் ஏர் உண்கண் - கயலை ஒத்த மையுண்ட கண்களையும், கனம் குழைமகளிர் - கனத்தை யுடைய குழையையுமுடைய மகளிர்,கை புணை ஆக - தம் கையே கருவியாக, நெய்பெய்துமாட்டிய சுடர் - நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கு, துயர்எடுப்பும் - துயரத்தை எழுப்புகின்ற, மாலை - மாலைக்காலத்தில், அரு பெறல் காதலர் வந்தென - பெறுதற்கரியதலைவர் வந்தாராக, விருந்து அயர்பு - விருந்து செய்து,மெய் மலி உவகையின் - உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியோடு,எழுதரு - முன் எழுந்த, கண் கலிழ் உகுபனி - கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியை, அரக்குவோர் - துடைப்போரை,தேற்றாம் - அறியேம்.

    (முடிபு) தோழி, மாலையில் காதலர் வந்தென அயர்பு பனி அரக்குவோரைத் தேற்றாம்.

    (கருத்து) என் துன்பமறிந்து அதனைப் போக்குவாரைக் காணேன்.

    (வி-ரை.) தேற்றாம் - அறியேம். ‘பிரியுங்கால் துயர் பொறுத் தாற்றுவது உலகியல்’ என்றாட்கு மாறாக, ‘பிரிந்து வருங்கால் உவகைகொள்ளல் உலகியல்’ என்று தலைவி கூறியதாகக் கொள்க. இதனால் பிரிந்திருத்தலின் கொடுமை உணர்த்தப்பட்டது.

    அன்று, ஏ: அசை நிலைகள். துவலைத்துயர்கூர் காலையென்ற மையின் இங்கே குறிக்கப்பட்ட பருவம் கூதிராயிற்று.

    கயலேருண்கண்ணும் கனங்குழையும் உடையாரென்றது இயற்கையழகும் செயற்கையழகும் பொருந்தினரென்றபடி. புணை - ஆதாரம்;இங்கே கருவி. மாட்டிய - கொளுத்திய. சுடர் துயரெடுப்புதலாவது மாலைக்காலத்தை அறிவுறுத்திக் காமநோய் மிகுதற்குக் காரணமாதல்.

    மாலையில் மகளிர் விளக்கேற்றுதல் மரபு.

    மெய்ம்மலியுவகை - உடம்பு பூரிக்கும் உவகை (புறநா. 45:9,உரை.) எழுதரு - முன்பு எழுந்த. அரக்குவோர்: தோழிமார். தலைவியர் மாலைக்காலத்தில் துயர் மிக்குக் கலிழ்ந்து நிற்ப, தோழியர் தலைவர்வந்ததறிந்து விருந்தயர்ந்து தலைவியர் கண்ணீரைத் துடைப்பர். அயர் பென்பதை எச்சத்திரிபாகக் கொண்டு விருந்தயரும் பொருட்டென்று பொருள் கூறலும் அமையும்.

    தலைவர் வந்தாரென்று கூறி அழுதகண் துடைப்பாரையன்றி, ஆற்றியிருத்தல் வேண்டுமென்று அறங்கூறுவாரையே பெற்றேனென்று தலைவி இரங்கிக் கூறினாள்.

    கலிழுகுபனி: “வரிப்புனை பந்து” (முருகு. 68) என்பது போல நின்றது.