பக்கம் எண் :

குறுந்தொகை


704


 400.    
சேயாறு செல்லா மாயி னிடரின்று 
    
களைகலங் காமம் பெருந்தோட் கென்று 
    
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி 
    
முரம்புகண் ணுடைய வேகிக் கரம்பைப் 
5
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய் 
    
இன்று தந்தனை தேரோ 
    
நோயுழந் துறைவியை நல்க லானே. 

என்பது வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.

    (வினைமுற்றுதல் - மேற்கொண்ட காரியம் நிறைவேறப் பெறுதல்.)

பேயனார்.

     (பி-ம்.) 1. ‘செல்வாம்’; 2. ‘கனைக காமம்’, ‘களைக காமம்’, ‘கனைஇக் காமம்’; 4. ‘களரிக்கரம்பைப்’; 6. ‘தேரே’.

    (ப-ரை.) சேய் ஆறு செல்லாமாயின் - நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்லேமாயின், இடர் நின்று -துன்பமின்றி,பெரு தோட்கு காமம் களைகலம் என்று - பெரிய தோளை யுடைய தலைவிக்குக் காமநோயைக் களையமாட்டேமென்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி - நன்மையைவிரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி, முரம்பு கண் உடைய ஏகி - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விள்ளும்படிபோய், கரம்பை - கரம்பை நிலத்திலே, புதுவழி படுத்த - புதிய வழியை உண்டாக்கிய, வலவோய் - தேர்ப்பாகனே, நோய் உழந்து உறைவியை - நோயினால் வருந்தி உறையும் தலைவியை, நல்கலான் - இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின், இன்று தேரோ தந்தனை - இன்றைக்கு நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை.

     (முடிபு) வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

     (கருத்து) உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின் திறமை பாராட்டற்குரியது.

     (வி-ரை.) ‘ இன்று செல்லாமாயின் தலைவனை எதிர்நோக்கி நிற்கும் தலைவியின் உயிர் நீங்கும். ஆதலின் இன்றே தேரைச் செலுத்தல்வேண்டும்’ என்பது பாகன் நினைவு. சேயாறாதலின் விரைவிற் செல்ல எண்ணினான்.

    ‘செல்வாம், களைய காமம்’ என்ற பாடத்திற்கு, ‘இன்று செல்வாமாயின் இடர் இல்லை; நாம் தலைவியின் காம நோயைக் களைவேமாக’ என்று பொருள் கொள்க.