பக்கம் எண் :

குறுந்தொகை


706


விளையாட்டு மகளிரை அஞ்சி, ஈர் ஞெண்டு - ஈரத்தையுடையநண்டு, கடலில் பரிக்கும் துறைவனொடு - கடலுக்குள்ஓடும் துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள் நக்குவிளையாடலும் - ஒரு நாள் நகைத்து விளையாடுதலையும்,மெய் தோய் நட்பு - அவனுடைய மெய்யைத் தோய்ந்தநட்பானது, கடிந்தன்று - நீக்கியது, ஐதேகம்ம - இதுவியத்தற்குரியது.

     (முடிபு) நட்பு கடிந்தன்று; ஐதேகம்ம.

     (கருத்து) தலைவனோடு அளவளாவியதனால் உண்டான வேறுபாடு அவனைக் காணாமலிருக்கச் செய்தது.

     (வி-ரை.) பகற் குறியிடத்துத் தலைவனோடு மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தினமையின் தலைவியின்பால் வேறுபாடுகள் உண்டாயின;அவற்றை நோக்கிய தாய் அவளை இற்செறித்தாளாக. அதுமுதல்பழம்படியே தலைவனோடு விளையாடுதலும் அரிதாயிற்று.

     அடும்பு: கடற்கரையில் வளருங் கொடி (குறுந். 243: 1-4, 248: 3-5, 349: 1-3.)

    கடனீராடி மாலை வேய்ந்தனராதலின் நீர்வார் கூந்தலுடையராயினர். மகளிர் நீராடிக் கூந்தலில் மாலைகளை அணியும் வழக்கம்,

  
“அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் 
  
 தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் 
  
 ........ ........ ........ ........  
  
 பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி 
  
 ........ ........ ........ ........  
  
 பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்  
  
 மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி”     (குறிஞ்சிப். 55-104) 

என்பதனாலும் பெறப்படும்.

    மகளிர் அலவனாட்டுவராதலின் அவருக்கு அஃது அஞ்சியது. விளையாடலும்: உம்மை இழிவு சிறப்பு.

    ஐது - வியப்பைத் தருவது; ஏகு: அசை நிலை; அம்ம: வியப்பிடைச் சொல். நட்பே: ஏ அசைநிலை.

    ஐதேகாமமென்னும் பாடத்திற்குக் காமம் வியக்கத்தக்கதென்று பொருள் கொள்க; காமம் - மெய்யுறுபுணர்ச்சி.

    “மெய்தோய்ந்த நட்பு, கண்டு நகுதலையும் போக்கியதுவியத்தற்குரியது” என்று கூறினாள்.

    (மேற்கோளாட்சி) மு. தன் தோற்றப்பொலிவாகிய வேறுபாடு கண்டு தமர் தன்னை இற்செறித்தமையைத் தலைவி தன்னுள்ளே கூறியது (தொல். களவு. 20, ந.)