iii


பதிப்புரை

    பன்னெடுநாளாய் இருவகை வழக்கினும் நின்று நிலவி ஞாலமளந்த மேன்மையதாய், உலகனைத்திற்கும் தன் தனிப்பண்பை நல்கி வளமுறுத்திச் சீரும் சிறப்பும் எய்தித் திகழும் தொன்மைமொழி தமிழ்மொழி ஒன்றேயாம். அம் மொழியின்கண் பிற எம்மொழிக்கும் இல்லாத நனிநாகரிக மக்கள் தனி ஒழுகலாற்றுக்கு இலக்கணமும் அமையப்பெற்றிருக்கின்றது, அதுவே பொருளதிகாரம் எனப்படும். பொருளதிகாரம், "அகத்திணை புறத்திணை" என இருபெரும் கூறாய் அவற்றின் துணையாய் விளக்கங்காட்டும் களவு, கற்பு, பொருள், மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என ஏழு இயல்களையும் கொண்டு மிளிர்கின்றது. இத் தொல்காப்பியம் வரலாற்று ஆராய்ச்சிப்படி ஐயாயிரத்தறுநூறு ஆண்டுகளுக்கு முன்னுள்ளதென ஐயமின்றித் துணியப்பட்டதாகும்.

    இப் பொருளதிகார இலக்கியமாய்த் திகழ்வன முத்திறத்தொகை நூல்களாகும். அவற்றுள் நடுவணதாகத் திகழ்வன எட்டுத்தொகை. ஏனைய பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் என்ப, எட்டுத்தொகை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, நெடுந்தொகை (அகம்); புறநானூறு என்ப. இவற்றைக் குறிக்கும் பழைய வெண்பா :

    
"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ 
    
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் 
    
கற்றறிந்தா ரேத்துங் கலியே யகம்புறமென் 
    
றித்திறத்த வெட்டுத் தொகை"  

என்ப.

    அகத்திணை புறத்திணை என்பன முறையே வீட்டாட்சியும், நாட்டாட்சியும் குறிப்பன. அகம் இன்பத்தினையும், புறம் அறம் பொருள் வீட்டினையும் குறிப்பன. உண்மையான் நோக்கின் அகம் செம்மையுறுதற்குத் துணையாகவே புறம் அமைந்துள்ள தென்பது புலனாகும். புறம் எனினும் காவலெனினும் ஒக்கும். அறம் ஒற்றுமைக் காவலாகவும், பொருள் வேற்றுமைக் காவலாகவும் இருப்பன.