iv


எல்லாவுயிர்க்கும் இன்பம் ஒன்றே இயல்பாகக் காணப்படுகிறது. அதனாலேயே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரும்,

    
"எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது  
    
 தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்"  - தொல்.பொருள் - (சூ, 223) 

என்றருளினர். இன்பமென்பது ஆணும் பெண்ணுமாகப் பொருந்தி வாழ்வது. அதுவே தலையாயதாகும். அவ்வாழ்வு ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகச் சொல்லப்படும் எல்லாவுயிர்களுக்கும் உள்ளது. ஆறறிவு படைத்த நம்மனோர் வாழ்க்கையை ஒழுக்கந்தவறா விழுப்பேற்றுடன் நெறிமுறையாய் ஒழுகச் செய்து உய்யும் வழிகாட்டுவது அகன் ஐந்திணையாகும்.அகன் ஐந்திணையும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனச் சொல்லப்படும், இவை, முறையே அறம், பொருள், இன்பம், வீடு, பேறு என்னும் பயன்களை நல்கும் நிலைக்களமும் ஒழுக்கமும் ஆகும். இவையே பொருளுண்மை காட்டும் நமசிவய என்னும் நற்றமிழ் மறைப் பொருளுமாகும்.

    எட்டுத்தொகையுள் பதிற்றுப்பத்து, கலித்தொகை, இரண்டற்கும் இருபெரும் நல்லிசைப் பெரும்புலவர்கள் கடவுள்வாழ்த்தருளியுள்ளனர். அவ்விரண்டும் முழுமுதற் சிவபெருமானையே குறிப்பன. பரிபாடல் கடவுட் பாடல்களையே முதன்மையாகக் கொண்டு திகழ்வது. ஏனைய ஐந்துக்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் செந்நெறிப் பெரும் புலவரே கடவுள் வாழ்த்துப் பாடியருளினர். அப் பாடல்களான் தமிழகப் பண்பாம் ஒரு கடவுட் கொள்கையும், அக் கடவுள் முழுமுதற் சிவமென்பதூஉம், அதுவே மாயோன், சேயோன், வேந்தன், வருணன், என வழிபடப்பட்டு வருவதும், தெளிவுபெற அமைத்துள்ளனர்.

    நற்றிணைக்கு மாயோனும் குறுந்தொகைக்குச் சேயோனும் ஆகிய சிவத்தின் இருகூறாம் திருவருளுக்கும், ஐங்குறு நூற்றுக்கு அம்மை அப்பராய்த் திகழும் சிவமுழுமுதற்கும், அகம் புறம் இரண்டற்கும் சிவபெருமானுக்கும் பாடியருளியுள்ள பண்பு எண்ணி எண்ணி இன்புற்றுப் பாராட்டற்குரியது. இம் முறையே "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்னும் தொல்காப்பியப் பொருளதிகார ஐந்தாம் நூற்பாவுக்குப் பொருள் கொள்ளல் அமைவுடைத்து.