எட்டுத்தொகையுள் பதிற்றுப்பத்து, புறநானூறு இரண்டு மொழித்த ஏனைய ஆறும் அகமேயாம். இவற்றுள்ளும் பரிபாடலொழித்தைந்தும் மக்கள் நுதலிய அகன் ஐந்திணையாகும். இவ்வைந்தனுள்ளும் திணை என்னும் பெயரால் திகழ்வது நற்றிணை ஒன்றேயாம். அது நற்றாய் போன்று சிறப்புரிமையுடையது. அதன்கண் காணப்பெறும் பாட்டுகளும் அத்துணைச் சுவைமிக்குடையன. அப் பாட்டுகள் இருநூற்றெழுபத்தைந்து பொய்யா நாவின் புலவர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளன. பாடப்பட்ட புரவலர், மன்னர், வேந்தர் முதலாயினோரும் அத் தொகையினரினும் மிக்காரேயாவர் : இன்னோர் வரலாறுகள் காண்க. பாட்டுகள் அகப்பொருள் குறிக்கும் அளவோடு புறப்பொருளாம் கொடை, ஆட்சிமுறை, ஆட்சிப்பரப்பு, அறப்போர், மொழியோம்பல், நெறிபேணல், அன்பு, அருள், நண்பு, ஒருமை முதலிய பல தமிழகவரலாறும் ஆங்காங்கே வேண்டுமளவு விளக்கப்பட்டுள்ளது. படிப்பார்க்கு முடிவிலா இன்பந் தருவதாம்.
இவ்வரிய நூற்குத் திரு. பின்னத்தூர,் அ. நாராயணசாமி ஐயரவர்கள் பண்டையுரையாசிரியர் உரையே எனக் கொள்ளும்படி நல்லுரை கண்டு ஏறத்தாழ நாற்பது யாண்டுகளுக்குமுன் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் உரிமையை முறையாகப் பெற்றுச் செவ்வியமுறையில் இப்பொழுது கழகத்தார் வெளியிடுகின்றனர். இதன்கண் கடினமும் மயக்கமும் தரும் சந்திகள் பிரித்தும், அரிது முயன்று பாடவேறுபாடுகள் குறித்தும், இதுகாறும் காணப்பெறாத இருநூற்று முப்பத்துநான்காவது பாட்டினைக் கண்டிணைத்தும், ஆயிரத்துக்கு மேற்பட்ட அருஞ்சொற் பொருள் எடுத்தமைத்தும் பதிப்பித்துள்ளனர்.
உரை தூய இனிய தமிழக நடையும், இலக்கணக்குறிப்பும் இறைச்சி, உள்ளுறை உவமம், துறை, மெய்ப்பாடு, பயன் முதலிய அகப்பொருள்களும் கொண்டு திகழ்கின்றது. உரையினை ஊன்றிக்கற்பார் ஒருவாறு தொல்காப்பிய வல்லுநராவர், முற்றுங் கற்றுணரப் பேரார்வங் கொள்வர். உரையாசிரியர்க்குக் கழகத்தார் நன்றி உரித்தாகுக.