x


    இராமாயணப்பொருள் உணர்ச்சியில் இணையில்லாதவர். இனிய மிடற்றிசை எய்ந்தவர். பிழையறப் பொருள்கூறிச் சொற்பொழிவு செய்யும் பேராற்றல் வாய்ந்தவர். இன்ன புலவர் உறைவிடம் அடைந்து அவர்தம் நட்புக்கொண்டு, தமக்கேற்பட்டிருந்த ஐயங்களையும்தீர்த்துக்கொண்டனர். அவரிடமே தமிழ்ப்பெருங் காப்பியங்கள் ஐந்தனுள் முதலதாகிய சிலப்பதிகாரத்தையும் பாடங் கேட்டனர். அவர் முன்னிலையில் "நீலகண்டேச்சுரக் கோவை" பாடி அரங்கேற்றினர். அப் புலவர் விரும்பியபடியே, காளிதாசர் இயற்றிய பிரகசன என்னும் நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார்.

நூல் இயற்றலும் ஆராய்ச்சியும்

    நம் ஐயர் அவர்கள், தமிழ்நாட்டின் பழ வரலாறுகளை ஆராய்வதில் மிக்க விருப்பமுள்ளவர். கோயில்களிலும், அவைபோன்ற வேறு இடங்களிலும் வெட்டியுள்ள பழங்கல்வெட்டுக்களைப் படித்தறியும் திறம்பெற்றவர். தமிழ்ப் புலவர்களின் வரலாறும் நன்கு உணர்ந்தவர். புலவர்கள் பல்வேறு சமயங்களிற் பாடிய நற்கவிகளை எல்லாம் மன அறையில் அமைத்து, வேண்டும்போது எடுத்துரைக்கும் வன்மை வாய்ந்தவர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க அதில் எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு எல்லாம் ஓர் அகராதியும் எழுதிவைத்துள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களும் உரை நூல்களும் பல. அவற்றுள், அச்சேறியவை மாணாக்கராற்றுப்படை 1. இயல்மொழி வாழ்த்து 2. தென்தில்லை (தில்லைவிளக்கம்) உலா 3. தென்தில்லைக் கலம்பகம் 4. களப்பாழ்ப் புராணம் 5. இராமாயண அகவல் 6. அச்சாகாதவை : இறையனார் ஆற்றுப்படை, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக் கோவை, சிவகீதை, சிவபுராணம், நரிவிருத்தம், பழையது விடுதூது, மருதப் பாட்டு, தமிழ் நாயகமாலை, செருப்பு விடுதூது, அரதைக் கோவை, வீர காவியம் என்பன. இறுதி இருநூல்களும் முற்றுப்பெறாதவை.

நற்றிணை வெளியீடும் புலவர் நாள் இறுதியும்

    இவர் சங்க நூலாகிய எட்டுத் தொகையுள் குறுந்தொகை; நற்றிணை, அகநானூறு என்பனவற்றை உரையுடன் வெளிப்படுத்த