பாடினோர் வரலாறு
1. அகம்பல்மால் ஆதனார்
இவர் ஆதன் என்னும் இயற்பெயருடையவர். அகம்பல் ஓரூர்; மதுரை மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் அகமலையென்று ஓரூருளது; அகம்பலென்பதே இங்ஙனந் திரிந்து வழங்குகிறதென்று ஊகிக்கப்படுகின்றது. அகம்பல்மால் - அகம்பலென்னும் ஊர்க்குத் தலைவனென்பதாம். இவர் முல்லைத்திணையை அலங்கரித்துப் பாடியுள்ளார். இவர் பாடலிற் கிளவித் தலைவன் வினைவலபாங்கனாக வைத்தமை ஆராயத்தக்கது. இவர் பாடியது நற்றிணை, செய்யுள், 81.
2. அஞ்சில் அஞ்சியார்
இவர் இயற்பெயர் அஞ்சி, அஞ்சிலென்னும் ஊரினராதலின், அஞ்சில் அஞ்சியாரெனப்பட்டார். இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் மருதத்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 90.
3. அஞ்சில் ஆந்தையார்
இவர் முற்கூறிய அஞ்சில் என்னுமூரிலுள்ள ஆதன் தந்தையார். தொல். எழுத்து. 348 ஆம் சூத்திர விதிப்படி ஆதன் தந்தை ஆந்தை யெனப்படுவதறிக. இவர் குறிஞ்சி நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 233 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
4. அம்மள்ளனார்
மள்ளனாரெனப் பலபேர் உளராதலால் அவர்களினின்றும் வேறுபடுத்த இவர் அம்மள்ளனா ரெனப் பட்டார்போலும். இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடலில் முருகவேளும் வள்ளியம்மையும் உவமிக்கப்பட்டுள்ளனர்; தலைமகன் தலைமகளை யழைத்தல் மிக்க இனிமையுடையது. இவர் பாடியது நற். 82 ஆம் செய்யுள்.
5. அம்மூவனார்
மூவன் என்னும் இவர் இயற்பெயர் அடைமொழி புணர்த்தி அம் மூவனாரெனப் பட்டதென்று ஊகிக்கலாம்; ஆயினும் இவர் பாடலில் மேலைக் கடற்கரையின்கணுள்ள தொண்டி, மாந்தை முதலாய சேரநாட்டு ஊர்கள் சிறப்பித்துப் பாடியிருப்பதுபற்றி இவர் சேரநாட்டு மேலைக் கடற்கரையில் இருந்தவரென்று கருதற்கிடமிருத்தலாலும் இக்காலத்தும் அந்நாட்டில் அம்மு, திம்மு, திப்பு என்னும் பெயர்கள் மக்களுக்கிடப்பட்டு வழங்கி வருதலாலும் இவரது இயற்பெயர் அம்மூவென்று