இவராற் கூறப்பட்டுள்ளது; அகம். 239 காதலன் பிரிந்தவழிக் காதலி சுவரிலே கோடிட்டு நாளெண்ணும் வழக்குக் கூறப்பட்டுள்ளது; அகம். 289 யாககுண்டத்தின்கீழ் யாமையை வைத்து மூடும் வழக்குக் கூறப்பட்டுள்ளது; அகம். 361. இவர் பாடியனவாக நற்றிணையில் ஆறு (3, 62, 113, 266, 308, 346) பாடல்களும் அகத்தில் எட்டுமாகப் பதினான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
14. இளநாகனார்
நாகன் என்னும் பெயருடையார் பலரிருத்தலின் அவரின் இவர் வேறென்பது தெரிய இளநாகனா ரெனப்பட்டார். இவர் பாலையையும் நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார்; தலைவியைக் கருதித் தலைமகன் செலவு அழுங்கியது நயமிக்கதாகும்; நற். 205, இவர் பாடியன நற்றிணையில் இரண்டு பாட்டு 205, 231.
15. இளந்திரையனார்
தொண்டைமான் இளந்திரைய னென்பவர் இவரே. இவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரென்னும் அந்தணராற் பாடப்பட்ட பெரும்பாண் ஆற்றுப் படைகொண்டவர். "ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாந் தோழி துணையாத் துயர்தீரும்-வாழி, நறுமாலை தாராய் திரையவோஓ வென்னுஞ், சிறுமாலை சென்றடையும் போது" எனப்பொய்கையாராற் பாராட்டிப் பாடப் பெற்றவருமிவரே, இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; காதலி காதலனைக் கடிந்து கூறுவது வியக்கத்தக்கது. நற். " வம்பமாரியென்று தலைவியை ஏமாற்றுதல் சுவையுடையதாகும்; நற். 99 இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (", 99, 106) பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
16. இளந்தேவனார்
மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனா ரென்பவர் இவரே; பண்டம் - பலசரக்கு. இவர் வணிகர் மரபினர்; பாலையையும் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார்; காதலி விருந்து புறந்தருதலை வியப்புறப் பாடியிருக்கிறார்; நற். 41 தலைவன் இரவுக்குறி வருதலைக் கூறுவது பாராட்டற்பாலது; அகம் 298 இவர் பாடியனவாக நற்றிணையில் 41 ஆம் பாடலொன்றும், அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
17. இளம்புல்லூர்க் காவிதி
இவரியற்பெய ரெழுதப்படவில்லை; காவிதிப்பட்ட முடைமையால் பாண்டி நாட்டு உழுவித்துண்ணும் வேளாளரென்று கொள்ளத்தகும். இவர் முல்லைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; வாடைக் காற்றானது யானை பெருமூச்செறிந்தாற் போன்றதென்று இவர் கூறிய உவமை வியக்கத்தக்கது. இவர் பாடியது நற். 89.
18. இளம்போதியார்
போதியார் என்றதனாலே இவர் புத்தசமயத்தினர் போலும். இவர் நெய்தற்றிணையைப் புனைந்து கூறியுள்ளார்; தலைவன் வரையாது களவின் வருதற்கு அஞ்சுகின்றானென்று தோழி கூறுவதாக இவர் கூறியது வியக்கத்தக்கது; நற். 72 இவர் பாடியது இப் பாடலொன்றேயாம்..