xviii


உரோடகமெனவும் ஏடுகளிற் பலபடியாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. இப்பொழுது இவ்வூர் ஒரகடமென்று திரிந்து வழங்குகிறது; காஞ்சிபுரம் வட்டத்திலுள்ளது இவர் குறிஞ்சித் திணையையும் பாலைத்திணையையும் புனைந்து பாடியுள்ளார்; இவர் பாடியனவாக நற்றிணையில் 306 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் மூன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
24. உலோச்சனார்

    இவர் நெய்தல்நிலத்தை மிகச் சிறப்பாக அமைத்துப் பாடவல்லவர். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப் பாடியிருத்தலானே, அவன் காலத்தவரென்று தெரிகிறது; புறம், 377 நற்றிணை 131 ஆம் பாட்டிலும் அகத்திலும் பெரியனென்னும் வள்ளலையும் அவனது பொறையாற்றையுஞ் சிறப்பித்துக் கூறியுள்ளார். நற். 38 இல் கடற்கரையின் கணுளதாகிய "காண்டவாயில் என்னும் ஊர் இவராற் கூறப்பட்டுள்ளது; அதனைக் காண்டவாயில் எம் அழுங்கலூர் என்று பாராட்டிக் கூறியிருத்தலானே இவர் அவ்வூரிலிருந்தவர்போலுமென்று கருதவுமாம். கடலிலுள்ள பலவகை மீன்களையும் உவமை முதலியவற்றோடு தெளிவாகக் கூறுதலால், இவர் பரதவர் மரபினர் போலும். மற்றும் நற் (74)இல் மருதத்து நிகழவேண்டிய பரத்தையிற்பிரிவினையும், நற். 149 இல் பாலையில் நிகழவேண்டிய உடன்போக்கினையும், ஏனைப் பாடல்களில் குறிஞ்சியில் நிகழ்தற்பாலவாகிய களவொழுக்கம் அனைத்தினையும் நெய்தலில் நிகழ்ந்தனவாகவே வைத்துப் பாடிய ஆற்றல் வியக்கத்தக்கதாகும். நற். 278 இல் புன்னைக்காயில் நெய்யெடுக்கும் வழக்கையும், நற். 331 இலும் அகத்திலும் மகளிர் உப்புக்குவட்டின் மேலேறி மீன் பிடி படகுகளையெண்ணும் வழக்கையும் கூறியுள்ளார். இக்காலத்துத் திமிங்கலத்தின்மீது எறியீட்டி வீசிப் பிடிக்கின்ற வழக்கம் பண்டைக்காலத்துமுளதென்று அகத்தில் இவர் பாடலா லறியப்படுகிறது. இவர் இத்துணைப் பாடலினும் பெரும்பாலும் களவொழுக்கத்தையே பாராட்டிப் பாடுதலால் களவியல் பாடுதலிற் சிறந்தவரென்று கொள்ளக் கிடக்கின்றது. நற். 64 ஆம் பாட்டாகிய குறிஞ்சித்திணைச் செய்யுள் இவர் பாடியதாக எழுதியிருப்பது ஒருகால் ஏடெழுதினோர் தவறாயிருக்கலாம்; அஃது இவர் பாடியதன்று. மற்றும் தலைவன் பகற்குறி வந்து மீள்வானை இன்றிங்கிருந்து விருந்துண்டு செல்கவென்று கூறும் தோழிகூற்றில் அவனுக்கும் அவனுடைய குதிரைக்கும் ஆகாரமமைத்துக் கொடுக்குஞ் சிறப்பை நற். 254 இனும் அகத்திலும் விரித்துக் கூறுகின்றார். ஏனை நிலத்தினும் நெய்தனிலமே எந்நாளும் வருவாய் மிக்குளதென்று இவர் கூறும் நற், (311) பாடல் கல்வி யறிவில்லாதாரையும் இனிது மகிழ்விக்கும். இரவுக்குறி நேர்கின்ற தோழி கூறுமுகத்தானே நெய்தனிலத்தூரர் தமர் ஒருவரையொருவர் அறியாதபடி மக்கள் நெருக்கமிக்குடையதென்று நற். 331 இல் சிறப்பிக்கிறார். கொல்லைப்படப்பைகள் கண்டல் மரங்களை வேலியாகவுடையன வென்று பல இடங்களிற் கூறுகிறார். இக் கண்டல் மரத்தின் கழி (கொம்பு)களே இக்காலத்தில் தோணி தள்ளுபவர்க்குப் பற்றுக்கோடாயுள்ளன; அவை கண்டற்கழியென்றே வழங்கப்படுகின்றன. விரிப்பிற் பெருகுமாதலின் இம்மட்டோடு நிறுத்தலாயிற்று. இவர் பாடியனவாக நற்றிணையில் இருபது 11, 38, 63, 64, 71, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 378 பாடல்களும்,