xix


குறுந்தொகையில் நாலும், அகத்தில் எட்டும், புறத்தில் மூன்றுமாக முப்பத்தைந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
25. உரையூர்க் கதுவாய்ச்சாத்தனார்

கதுவாய்-முரிந்த வாய். இவ்வடைமொழி எக்காரணம்பற்றிக் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவர் மருதத்திணையிற் பயிற்சியுடையவர். இவர் பாடலில் தலைவி ஊடியவழித் தலைவன் கூறுவது வியப்புடையதாகும். இவர் பாடியது நற். 370 ஆம் பாட்டு.

எயினந்தை மகன் இளங்கீரனார்

முன்வந்த (13) இளங்கீரனா ரென்பவர் இவரே.

  
26. எயினந்தையார்

    எயின்+தந்தை=எயினந்தை; எயினனைத் தந்தையாக வுடையவரென்பது; அன்றி இவர் பாடலில் "எயின் மன்னன்போல" என்றிருத்தலால் இவ்வருந் தொடர்மொழிபற்றி இப்பெயர் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவர் முற்கூறிய (13) இளங்கீரனாரின் தந்தையாராவர்; பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; தலைவன் மகிழ்ச்சியும் தலைவி துயரமும் தோழி கூறவதாக இவர் கூறியது ஆராயற்பாலது; இவர் பாடியது நற். 43 ஆம் பாட்டு.

  
27. ஐயூர் முடவனார்

    முடவரென்பது வடிவுபற்றிய பெயர். இவர் முடவர்; இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஐயூர் பாண்டிநாட்டகத்த தோரூர். இவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் ஆற்றலைச் சிறப்பித்து அரசவாகை பாடியவர்; புறம் 51 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனா லாதரிக்கப்பட்டு வந்தவர்; இவர் நடக்க இயலாமையின் ஓர் ஊர்தி (வாகனம்) வேண்டித் தாமான்தோன்றிக் கோனிடஞ் சென்று பரிசில் வேண்ட அவன் இவருக்கு உணவளித்தலும் அதனை விரும்பாராய்த் தாம் வந்த செய்தி தெரிவிப்ப அவ்வண்ணமே யானையும் அதற்கு வேண்டுவ பிறவும் நல்கப்பெற்று மீண்டனர்; புறம். 399 கிள்ளி வளவன் இறந்த தறிந்து பெரிதும் புலம்பி வருந்தினர். புறம். 228 அதியன் எழினி போரிற் பட்டதைப் பாராட்டிக் கூறியுள்ளார்; அகம். 216 இவர் நற். 334 இல் கூறிய உள்ளுறை யாவரும் வியக்கத்தக்கது. இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார்; முகம்புகு கிளவி பாடியவருள் இவருமொருவர் இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு 206, 334 பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்திலொன்றும், புறத்தில் நாலுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
28. ஒருசிறைப் பெயரியனார்

    இவர் நாஞ்சில் வள்ளுவனைப் பாடிப் பரிசில் பெற்றவர்; புறம். 137 முல்லையையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். தலைமகனைத் தேர்ப்பாகன் தேற்றுவதாக இவர் கூறியது இன்பந்தரற்பாலது. இவர் பாடியனவாக நற்றிணையில் 121 ஆம் பாடல் ஒன்றும், குறுந்தொகையிலொன்றும் புறத்திலொன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.