xx


29. ஓரம்போகியார்

    ஏடெழுதுவோர் பிழையால் இவர் பெயர் ஓரம்போதியாரெனவும,் கரம் போகியாரெனவும், தரம் போகியாரெனவுங் காணப்படுகிறது. மருதத்திணையை விரித்து அந் நிலத்துள்ள கருப்பொருள்களைத் திணைக்கேற்ற பொருள்களாகக்கொண்டு உள்ளுறையுவமம், இறைச்சி முதலாயவற்றை யமைத்துப் பலவகைச் சத்துவமும் புலப்படக்காட்டிப் பரத்தையிற் பிரிவு முதல் எல்லாவற்றையும் தெளிவாகக்கூறும் ஆற்றலுடையவர். இவர் பாடியவற்றுட் புறமொன்றொழித்து ஏனைப்பாடலனைத்தும் மருதத்திணையே. இவராற் பாடப்பெற்றோர் ஆதன் அவினி, இருப்பையூர் விராஅன், பாண்டியன், சோழர், மத்தி முதலாயினோர். இத்தகைய மாதரே காதலர்பாற் புலத்தற்குரியரென்று தோழி கூற்றாக இவர் கூறியது அருமை வாய்ந்தது; அகம் 316 இதிற்கூறிய உள்ளுறை பாராட்டற்பாலது. புணர்ச்சியின்பங் கூறித் தலைவியைப் புகழ்வது மகிழ்ச்சிதரற்பாலது; குறுந். 70 இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு 20, 360 பாடல்களும், குறுந்தொகையில் நான்கும், ஐங்குறுநூற்றில் முதல் நூறும், அகத்தில் இரண்டும், புறத்தில் ஒன்றுமாக 109 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

    இவர் பாடிய "வெள்ளி விழுத்தொடி" என்ற அகம். 289 ஆம் பாடலை யெடுத்து உடன்பாடாக நக்கீரனார் குறிப்புரை (களவியல். 18) கூறியதும், அதனை நச்சினார்க்கினியர் "பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து-பெறுதகையில்லாப் பிழைப்பினும்" (தொல். பொருள். 150) என்றதன் கீழ் நக்கீரனார் கூற்றுக் கெதிர்மறையாகக் குறிப்புரை கூறியதும் ஆராயத்தக்கது.

  
30. ஒளவையார்

    இவர் சரிதம் பலவாறாகப் பலருங் கூறியிருக்கின்றதனால், அவற்றைப் பெரும்பாலும் விடுத்துச் சங்க நூலின் துறை கூறிய அளவுக்கு எழுதுகிறேன்.

    இவர் பாணர் மரபினர். இளமையில் விறலியாராக ஆடல்பாடல் முதலியவற்றிலே தேர்ந்து விளங்கியவர்; புறம். 89 இல் தம்மை விறலியென்று தாமே கூறுமாற்றானறிக. இவர் ஒருகாலத்துத் தகடூரில் அரசாண்ட அதிகமான் "நெடுமான் அஞ்சி" என்பானிடம் பரிசில் பெறச் சென்று அவன் பரிசில் கொடாது நீட்டித்தலானே சினந்து மீள்வாராயினர்; புறம். 206 அதனையறிந்த அஞ்சி, அஞ்சிவந்து வேண்டிப் பரிசில் உதவ அதனைப் பெற்று மகிழ்ந்தனர்; புறம். 390 இவர் அவனால் கொடுக்கப்பட்ட கருநெல்லிக் கனியை யுண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தனர்; புறம். 91 குறள் 100 ஆம் பாட்டின் விசேடவுரையைப் பார்க்க, அஞ்சியொடு பெருஞ்சேரலிரும்பொறை போர்செய்ய வந்த பொழுது அப் பகையரசனொடு அஞ்சியைப் பலபடியாகப் புகழ்ந்து கூறியுள்ளார்; புறம். 87. 88. 89 அவ் வஞ்சி கோவலூரை வென்றபொழுது அவனைப் பலவாறாகப் புகழ்ந்து பாடினர்; புறம். 99 அல்லாமலும் புறம். 90, 92 ஆம் பாட்டுக்களில் அவனது வீரத்தன்மையை யெடுத்துச் சிறப்பித்துளார். அவனொடு பெருஞ்சேரலிரும்பொறை போர்செய்தகாலையும் அவன் பொருது புண்பட்டு நின்றகாலையும் இவர் பாடிய செய்யுட்கள் படிப்போர் மனத்தை யுருக்குந் தன்மையவாகும். இவ்வாறு அவனைப் பாடியதன்றி அவன்