மகன் பொருட்டெழினியையும் பலபடியாகப் புகழ்ந்து பாடியுள்ளார்; புறம். 96, 102 அதிகமான் ஒருகால் இவரைத் தொண்டைமானிடத்துத் தூதாகவிடுப்பச் சென்றபொழுது தொண்டைமான் தன் படைக்கலச்சாலையைக் காட்டக்கண்டு அது தலைக்கீடாக அதிகனைப் புகழ்ந்து பாடினர்; புறம். 95 பின்பு அஞ்சி இறந்ததுகண்டு ஆற்றாது புலம்பினார்; புறம். 231, 232, 235 இவர் கள்ளுண்ணுதலையும் ஊன் உண்ணுதலையும் மிகப் பாராட்டிப் பாடியுள்ளார்; புறம். 235, 290.
மற்றொரு காலத்துக் கொண்கான நாட்டதிபனும் ஏழில்மலைத் தலைவனுமாகிய நன்னன்பாற் சென்று சிறந்த பாடல்களைப் பாடிப் பொருள் கூறி மகிழ்விக்கவும் அவன் அவற்றைப் பாராட்டினானல்லனாக, அது கண்டு இவர் முனிந்து "இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே, குருமேயு மன்றுநின் குற்றம்-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலாதன விரண், டோட்டைச் செவியு முளை" என்று பாடி வெறுத்து மீண்டனர்.
இவர் அகத்துறையில் ஐந்து நிலங்களையுஞ் சிறப்பித்துப்பாடும் ஆற்றலுடையார் வெள்ளிவீதியார் தம் கணவனைத் தேடிச்சென்றதைப் பாராட்டிக் கூறியுள்ளார்; அகம். 147 மூவேந்தரும் கொடைவள்ளலாகிய பாரியின் பறம்புமலை (பிரான்மலை)யை முற்றியிருந்தபொழுது பாரி கிளிகளைவிடுத்துப் புறத்திருந்த நெற்கதிரைப் பெற்று வாழ்ந்திருந்ததைச் சுருக்கி விளங்கக் கூறியுள்ளார்; அகம். 303 அவ்வரசர்கள் பாரியை வஞ்சித்துக் கொன்று அவனது மலை முதலியவற்றைக் கைக்கொள்ளலும் அதுகாறும் மணம்புரியாதிருந்த பாரிமகளி ரிருவரையும் அழைத்துச்சென்று கபிலர் விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகிய இருவரிடத்துஞ் சென்று இம் மகளிரிருவரையும் மணம்புரிந்துகொள்கவென வேண்டினார். அவர்கள் மறுத்தனராக உடனே தம்மை யடுத்திருந்த அந்தணர்களின் பாதுகாவலில் அவர்களை விட்டுச் சேரநாடு சென்றனர். அப்பால் அங்குவந்த ஒளவையார் பாரிமகளிர்கள் நிலையையறிந்து அவ் விருவரையும் உடனழைத்துச்சென்று, திருக்கோவலூரை யடைந்து மலையமான் தெய்வீனன்பானுக்கு மணம்புரிவித்து மீண்டருளினார். இவர் காமநோயை மரமாக உருவகஞ் செய்திருப்பது வியப்புடையது; அகம். 273 முகம்புகு கிளவி பாடியவருள் இவருமொருவர், இவராற் பாடப்பெற்றோர் அஞ்சி, அவன் மகன் பொகுட்டெழினி, பாரி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சேரமான் மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கிள்ளிவளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னன் என்பவர்கள். இவர் பாடியனவாக நற்றிணையில் ஏழு (129, 187, 295, 371, 381, 330, 3") பாடல்களும், குறுந்தொகையில் பதினைந்தும், அகத்தில் நான்கும், புறத்தில் முப்பத்துமூன்றும் திருவள்ளுவ மாலையிலொன்றுமாக அறுபது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
31. கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
தச்சனாரென்றதனால் இவர் கம்மாளரென்று தெரிகிறது. கச்சிப்பேடு-ஓரூர்; காஞ்சிபுரத்தைச் சார்ந்தது. இவர் முல்லைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; இவர் பாடியது நற். 266 ஆம் பாட்டு.
32. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
இவர் முற்கூறிய இளந்தச்சனாரின் முதியோரென்பது தோன்றப் பெருந்தச்சனா ரெனப்பட்டார். இவர் குறிஞ்சித்திணையைப் பாடும்