xxii


வன்மையுடையார்; இளந்தச்சனார் முல்லையைப் பாடியுளர், மதியுடன் படுக்குந் தலைமகன் நீவிர் யாவிரென வினாவியதாக இவர் கூறியது சிறப்புடையதாகும்; நற். 213 இவர் பாடிய பாட்டு இரண்டு; நற். 144, 213.

  
33. கடுவன் இளமள்ளானார்

    இவரே அகத்தில் மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் இள மள்ளனாரெனவும் கடுவன் மள்ளனாரெனவுங் கூறப்படுபவர். இவர் இயற்பெயர் மள்ளன். கடுவன் இளவெயினனார் எனப் பரிபாடலில் ஒருவர் பெயர் காணப்படுதலால் கடுவன் என்பது ஓரூரின் பெயர்போலும். அக் காலத்துத் தமிழியற்படி கூத்தாடுந் தொழிலுடைமையாலே தமிழ்க்கூத்தன் எனவும், மதுரையில் வந்து தங்கியதனால் மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவனிளமள்ளனெனப்பட்டாரெனவுங் கொள்க. பாண்டியன் மாறன் வழுதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; நற். 150 இராமபிரான் தென் கடற்கரையகத்துக் கடலடைக்கவேண்டிச் சூழ்ச்சி செய்திருந்த கதையொன்றனை யமைத்துக் காட்டுகிறார்; அகம். 70 முல்லை, குறிஞ்சி, மருத முதலாய திணைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 150 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும் அகத்தில் இரண்டுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
34. கணக்காயனார்

    தமிழரிச்சுவடிக்குத் தமிழ்க்கணக்கென்றும், நெடுங்கணக்கென்றும் பெயருண்டு; ஆயம்-கூட்டம். கூட்டமாகப் பிள்ளைகளைச் சேர்த்து வைத்துத் தமிழ்க்கணக்கைப் பயிற்றுவித்தலால் உவாத்தியாயர் கணக்காயரெனப்பட்டார், அங்ஙனமே இவரும் பிள்ளைகளுக்கு உவாத்தியாயராய் இருந்தமையிற் கணக்காயனா ரெனப்பட்டார்; குறுந்தொகை 304 ஆம் பாட்டின்கீழ்க் கணக்காயன் தத்தன் என்றெழுதியிருத்தலால் இவரது இயற்பெயர் தத்தனென்பதே. கூரைக் கணக்காயனென்று அகத்தில் காணப்படுகிறது; மதுரை யென்பதில் மகரம் செல்லரித்துவிட எஞ்சிய துரை என்பது பொருள்பயவாமையால் துரையைக் கூரையென்று திருத்தி யெழுதியிருக்கலாம்; இங்ஙனம் ஏடெழுதுவோரால் மதுரையென்பது கூரையென்றாயிற்று. இவர் நக்கீரனார்க்குத் தந்தையாரென்னும் பதவி வாய்ந்தவர்; குறிஞ்சி நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; வேங்கடமலையையும் பாண்டியரது கொற்கையின் முத்துக்களையும் புகழ்ந்து கூறியுளார்; அகம். 27 பாண்டியரது பொதியில் மலையும், சேரமானது கொல்லி மலையும் சோழரது காவிரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன; அகம். 338 எறியீட்டி வீசித் திமிங்கலத்தைப் பிடிப்பது இவர் பாடலிற் கூறப்பட்டுள்ளது. குறு. 304 இவர் பாடியனவாக நற்றிணையில் 23 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் மூன்றும், புறத்தி லொன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
35. கணி புன்குன்றனார்

    நற்றிணை ஏடுகள் பலவற்றினும் கணி புன்குன்றனாரென்றே யிருத்தலின் அவ்வாறே பதிப்பிக்கப்பட்டது; புறநானூற்றிற் கணியன் பூங்குன்றன்