என்றிருக்கின்றது. அது சிறப்பாகக் காணப்படுகிறது. பூங்குன்றமென்னுமூரிலுள்ள கணியனென்று பொருள்படும் கணியன் சோதிடஞ் சொல்வோன். இவர் வாக்கு யாங்கும் பொதுநோக்காயுள்ளது. பாலையைப் பாடியுள்ளார். மாந்தரதியல்பும் அரசரதியல்பும் உலகத்தியல்பும் இத் தன்மையவென்று தலைவி கூற்றாகக் கூறியது ஆராயத்தக்கது; நற். 226 இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும் புறத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
36. கண்ணகனார்
இவர் இயற்பெயர் நாகன்; கண்ணனுடைய மகனாதலிற் கண்ணனாகனார் என்றும் சொல்லப்படுபவர்; சில ஏடுகளிற் கண்ணகனாரென்று பிழைபட எழுதியிருந்தமையால் இருந்தபடியே பதிப்பிக்கப்பட்டது. இவர் கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் முதலானோர் காலத்தவர்; புறம். 28 பரிபாடல் 218 ஆஞ் செய்யுளுக்கு இசைவகுத்தவர் இவரே. பாலைத் திணையைப் புனைந்து பாடியுள்ளார் காதலன் பிரிதலைத் தவிர்க்குமாறு தலைவி ஆராய்வதாக இவர் கூறியது ஆராயத்தக்கது: நற் 79 இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும் புறத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
37. கண்ணகாரன் கொற்றனார்
இவரது இயற்பெயர் கொற்றனார். கண்ணகாரன் என்பது விளங்கவில்லை. இவர் பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய மனைமருட்சி யாவரையும் மருட்டாநிற்கும்; இவர் பாடியது நற். 143 ஆம் பாட்டு.
38. கண்ணங் கொற்றனார்
இவர் இயற்பெயர் கொற்றனார்; இது கண்ணனென்னுந் தந்தை பெயரொடு சேர்ந்து கண்ணங்கொற்றனா ரென்றாயிற்று. இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார்; தலைவன் இரவுக்குறி வருகின்றதன் அருமையும், தலைவி அவன்பால் வைத்துள்ள அன்பும் தோழி கூற்றாக விளங்கக் கூறுகின்றார். இவர் பாடியது நற். 156 ஆம் பாட்டு.
39. கண்ணம் புல்லனார்
கருவூர்க் கண்ணம் புல்லனாரென்ப ரிவரே. ஊர் கருவூர்; கண்ணன் தந்தை பெயர்; புல்லன் இயற்பெயர். நெய்தற்றிணையும் பாலைத்திணையும் பாடியுள்ளார். புணர்ந்துடன்போகக்கண்ட செவிலி சுரத்திடை மறவர் நிரைகொணர்ந்துய்ப்பதும் அங்கு அவர் குழங்கும் முழக்கமுங் கேட்டு என் பேதை யாங்ஙனம் வைகுமோவென்று புலம்புவதாக விரித்துக் கூறியுள்ளார்; அகம். 43 இவர் பாடியனவாக நற்றிணையில் 159 ஆம் பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
40. கதப்பிள்ளைச் சாத்தனார்
இவர் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரெனவும், கதப்பிள்ளையெனவும், கருவூர்க் கதப்பிள்ளை யெனவும் பலவாறாகக் கூறப்படுவார். இவர்