இவர் உரோடோகத்துக் கந்தரத்தனாரின் வேறல்லர் என்று எண்ணப்படுகிறது மேலே 23 பார்க்க.
41. கபிலர்
இவர் பாண்டி நாட்டிலே திருவாதவூரில் (பழைய திருவிளையாடல், 27 ஆம் விளையாடல், செய்யுள். (4) ) அந்தணர் மரபிலே பிறந்து (புறம். (126. 200. 201) ) வளர்ந்து உரிய பருவத்திலே கல்வி கற்பிக்கப்பெற்றுத் தமிழில் ஒப்பாரு மிக்காரு மில்லாத பயிற்சி யுடையராய்க் கடைச்சங்கப் புலவரிலொருவராகிப் பரணர், இடைக்காடர், ஒளவையார் முதலாயினோரிடத்துப் பெருகிய நட்புடையராய் விளங்குவாராயினார்.
முன்பொருகால் சேரமான் செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் பாடி அவனை மகிழ்வித்தனர்; புறம். 8 அவன் இவருடைய கையைப்பற்றி நும்முடைய கை மிக மெல்லியவா யிருக்கின்றனவெனலும் அவனை நோக்கி நீ போரில் பகைவரை வெல்ல அமைந்ததனால் நின் கைகள் வலியவாகும்; நின்னைப் பாடுபவர் உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு தொழில் செய்தறியாராதலால் அவர்களின் கைகளெல்லாம் மெல்லியவேயென்று பாடி யுவப்பித்தார்; புறம். 14 பின்பு கடையெழுவள்ளலிலொருவனாகிய வேள்பாரியை உயிர்த்தோழமை கொண்டு அவனது அவைக்களத்துப் புலவராக வீற்றிருந்தருளினார். அக் காலத்துப் பாரியைப் பாடிய பாடல்கள் கருதுவோ ருள்ளத்தை மகிழ்விக்குந் தன்மையன; புறம் 105 முதல் பார்க்க. அங்ஙனமிருக்கு நாளில் இடையே திருக்கோவலூரை யடைந்த முள்ளூரின் கணுள்ள மலையமான் திருமுடிக்காரியைச் சிறப்பித்துப் பலபடியாகப் புகழ்ந்து பாடி, அவன் பரிசில் கொடுக்கப் பெற்று மீண்டனர்; புறம். 121 முதல் பின்பொருகால் வையாவிக் கோப்பெரும்பேகனிடஞ் சென்று அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப் பாடி மீண்டு பாரியிடத்திருந்தார்; புறம். 143 இருக்கும்பொழுது பெரும்பாலும் பாரியினது பறம்புமலையிற் பழகினவராதலாற் குறிஞ்சித்திணை பாடுதலிற் சிறந்தவராயினார். ஆரியவரசன் யாழ்ப்பிரமதத்தனைத் தமிழின் சிறப்பு அறிவுறுத்தற்குப் பத்துப்பாட்டுளொன்றாகிய குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினார். அதனையறிந்த அவன் தமிழ் பயின்று சங்கத்தாரோடொப்பப் பாடுந்திறமையடைந்தனன். அவன் பாடியது குறுந். 184 ஆம் செய்யுள். இவர் இன்னாநாற்பது என்னும் நீதிநூல் பாடிச் சங்கத்தில் வெளியிட்டருளினர். இது பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று.