xxv


    இவரடுத்திருந்த வேள்பாரி கொடையாலெய்திய புகழ் இத் தமிழ்நாடெங்கும் பரவலானே அதனைக் கேள்வியுற்ற மூவேந்தரும் பொறாமைகொண்டு படையெடுத்து வந்து பாரியின் பறம்புமலையை முற்றுகை செய்தார்கள் : அதுகண்ட கபிலர் அவர்களிடஞ் சென்று பாரியின் புகழனைத்தையுங் கூறி, அவ் வள்ளலுக்கு முந்நூறு கிராமங்களிருந்தன; அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றுக்கொண்டனர்; இப்பொழுது அவனது பறம்புமலை ஒன்றேயுளது : நீங்களும் பாடிச்சென்றால் அதனைப் பெறலாமென்று அஞ்சாது கூறினர்; புறம். 110 அப்பால் அம் மூவரசரும் பாரியை வலிதினழைத்துப் போர்புரிந்து கொன்று அம் மலையையுங் கைப்பற்றிக் கொண்டார்கள்; புறம். 112 கைப்பற்றியவுடன் பாரியின் புதல்வியர் இருவரையும் இவர் அழைத்துக்கொண்டு பறம்பு மலையை நோக்கிப் பலவாறு புலம்பி (புறம். 113 முதல் 120 வரை.) அதனை விடுத்தகன்று விச்சிக்கோன் என்னுஞ் சிற்றரசனிடஞ் சென்று இப்பெண்களை மணஞ்செய்து கொள்ளென்றனர்; புறம். 200 அவன் உடன்படாமை கண்டு புலிகடிமாலென்னும் இருங்கோவேளிடம் போய் இம் மகளிரை மணம்புரிந்துகொள்ளென்று கேட்ப (புறம் 201) அவனும் மறுத்தானாக, அதுகண்டு அவனை வெறுத்து (புறம். 202) மீண்டு அவர்களைப் பார்ப்பாரின் பாதுகாவலின் வைத்துப் பின்னர்ச் சேரலன் செல்வக் கடுங்கோ ஆழியாதன் பாரிபோன்ற நற்குணமுடையானென்பதறிந்து அவனிடஞ் சென்று பதிற்றுப்பத்து ஏழாம்பத்துப் பாடி, அவனைப் புகழ்ந்து கூறி அவன் அளவிறந்த பரிசில் கொடுக்கப் பெற்று மீண்டனர்; (பதிற். ஏழாம் பதிகம்.) மீண்டும் பாரியைப் பிரிந்ததனாலாய துன்பம் மிகுந்து தாமும் உயிர்விடத் துணிந்து அவனோடென்னை விதிகூட்டுவதாகவென்று (புறம். 236) கூறி வடக்குமுகமாக விருந்து இந்திரியங்களை ஒடுக்கி ஆகாராதி வேண்டாது உயிர் துறந்தருளினார்.

    இவர் குறிஞ்சித் திணையில் வல்லவராதலின் அதற்குரிய கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானம் இவற்றையெல்லாம் பாராட்டிக் கூறியுள்ளார். "வாய்மொழிக் கபிலன்" (அகம். 78) என்று நக்கீரராலும், "நல்லிசைக் கபிலன்" (பதிற், 85) என்று பெருங்குன்றூர் கிழாராலும் "வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்" (புறம். 53) என்று பொருந்தில் இளங்கீரனாராலும், "புலனழுக்கற்ற வந்தணாளன்" (புறம். 126) "பொய்யா நாவிற் கபிலன்" (புறம். 174) என்று மாறோக்கத்து நப்பசலையாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்றவர்; மூவேந்தரால் முற்றிய பாரி கபிலரது சூழ்ச்சியால் கிள்ளைகளை விடுத்துக் கதிர் கொணர்ந்து உண்டிருந்தமையை நக்கீரர் சிறப்பித்துக் கூறாநிற்பர்; அகம். 78 ஒளவையாரும் அச் செயலைப் பெரிதும் பாராட்டாநிற்பர்; அகம். 303.