மந்திக்கு விருந்தாகக் கொடுக்கு மலைநாடனென வருணிக்கிறார்; நற். 353 யாவரும் வியக்கத்தக்க உள்ளுரையே கூறியுள்ளார்; நற். 373 இவர் பாடிய கிள்ளைவிடுதூது மிக்க இனிமையுடையது: நற். 376 தலைவியைச் சிறுகொம்பாகவும் அவள் கொண்ட காமத்தை அதனிடத்துத் தூங்கும் பெரும்பழமாகவுங் கூறுவர்; குறு. 18 இயற்கைப் புணர்ச்சிக்கட் குருகிருந்தது சாட்சியாகவெனத் தலைமகள் கூற்றாகக் கூறுவர்; நற். 25 இவர் குறுந். 38 ஆம் செய்யுளிற் கூறிய உள்ளுறையைத் திருக்கோவையாரிலெடுத்தாண்டமை யறிக. (திருக்கோவை, 276) ஓரியின் கொல்லிமலையிலுள்ள பாவையைச் சிறப்பித்துக் கூறுவர்; குறுந். 100 இவர் மலையமான் திருமுடிக்காரியையும் (குறுந். 198, 312) நள்ளியையும் (அகம். 238) சிறப்பித்துக் கூறா நிற்பர். தலைமகன் மலையை நோக்கியவுடன் பசலை தீர்ந்ததெனத் தலைவி கூறியதாக இவர் பாடியது வியக்கத்தக்கது; குறுந். 249.
இவர் பாடியனவாக நற்றிணையில் பத்தொன்பது (13, 32, 59, 66, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 386.) பாடல்களும், குறுந்தொகையில் இருபத்தொன்பதும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சிப் பாட்டு நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்துச் செய்யுள் பத்தும், அகத்தில் பதினாறும், புறத்தில் இருபத்தெட்டும், "நெட்டிலையிருப்பை என்ற தனிச்செய்யுளொன்றும், திருவள்ளுவமாலையி லொன்றுமாக 204 செய்யுளும், இன்னா நாற்பதில் நாற்பது செய்யுளும், குறிஞ்சிப்பாட்டு (பத்துப்பாட்டில் ஒன்று) ஒன்றுமாக 246 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
கபிலர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினோராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன.
42.கயமனார்
இவர் பாலைத்திணையில் உடன்போக்கையும் அதனை யடுத்த செவிலிபுலம்பல், நற்றாய் புலம்பல், மனைமருட்சி, கண்டோரிரக்கம் முதலாய புலம்பல்களையும் பலவாறாகச் சிறப்பித்துப் பாடவல்லவர்; அங்ஙனம் பாடிய பாடல்களனைத்தும் கேட்போரின் கன்மனத்தையும் கரைக்குந் தன்மையன. அகத்திலன்றிப் புறத்திலும் புலம்பற்றுறையாகிய முதுபாலையைப் பாடியுள்ளார். (புறம். 254) (முதுபாலை காவலனிறப்ப ஏனையோர் புலம்பல்) ஆகவே இவர் இருதிணையிலும் புலம்பல் பாடவல்லவராய் விளங்குகிறார். அகம் 145 இல் அன்னியும் திதியனும் பொருத்தனைக் கூறுதலால் அவ்விருவர் காலத்துக்கும் பிற்பட்டவராவார். கழங்குக் குறி பார்க்கும் நெறியை வெகு தெளிவாகக் கூறியவர் இவரே; அகம். 195 அழிந்த பாலையை வளமுடையதாக்கிக் கூறும் இவரது ஆற்றல் மிக நன்று; அகம் 259 உடன்போக்கின்கண் அறத்தொடு நின்று போக்கினை மறுத்து அஞ்சுவித்தாகப் புதிய நெறிகாட்டி யெழுதியவர் இவரே; நற். 12 இதனைப் பெரிதும் பாராட்டி இந் நெறியே நக்கீரனாரும் உரைகூறிப் போயினா ரென்றால், இவர் பாடலின் சிறப்பு இவ்வளவினதென் றளவிடற்பாலதோ? இறையனாரகப் பொருள் 23 ஆம் சூத்திரவுரை. புண்+தாள்=புட்டாள் எனப் புதுவிதி வகுத்தவரில் இவருமொருவர்; நற். 279 தலைமகன் தலைமகளாகிய இருவருடைய தாயர்களும் ஒருவரையொருவர் கடிந்து கூறும் வழக்கு இந்நாள் போலப் பண்டுமுளதென்பது இவர் பாடலா லறியலாம்; நற். 2" முன்னாளிற் காலாற் பந்துருட்டும் வழக்குள தென்பது நற். 324