துணையிலேனாதலிற் கூறுவாருமில்லை; பல்லிலே தீப்பிறக்க அடியுண்டு வருந்துவேனோ வென்றும், (அகம். 217) நெற்றியிற் பசலைகொண்டு யான் வருந்த இவள் நம்மால் அளிக்கத்தக்காள் என்று கருதாதவர் இனி நினைக்கவேமாட்டாரோ? நினைத்தும் பெரிய வினையிடைப்பட்டமையின் மறந்துளாரோ? (அகம் 235) தோழீ என் தனிமையில் இவ் வாடை வீசலானே இனிப் பொறேன் என்றும் பலவாறு புலம்பி வைகினார்; (அகம். 2") இவ்வாறு வருந்தி வைகிய நாளிற் போர்முனையிற்சென்ற கீரனார் மீண்டு வந்தனர்; அவர் வருகிறாரென்பதை முன்னரே ஏவலிளையரா லறிந்த எயிற்றியார் பெருமகிழ்வெய்திக் காதலன் வரும்பொழுது தேர்ப்பாகற்குக் கூறுவதாக அவருள்ளக் கிடையையுந் தம்முடைய நிலையையுஞ் சேரத் தொகுத்துப் பாடினார்; (அகம். 234) பின்னர், வந்த காதலனொடு மகிழ்ந்துறைவாராயினார்; இவர் பாடல்களைப் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகைநூலிற் கோத்தாரென்று கொள்க. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (281, 312) பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் ஐந்துமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
45. கள்ளம் பாளனார்
இவர் பெயர் கண்ணம் பாளனாரெனவும் பாடவேறுபாடு முண்டு. அகத்தில் கருவூர்க் கண்ணம்பாளனாரென்றிருத்தலால் இவர் ஊர் கருவூர். "களப்பாள்" என்று ஊர் இருத்தல்போலக் "கள்ளம்பாள்" என்பதும் ஊராக இருக்கலாம். அகத்தில் கருவூர்க் கண்ணம்புல்லனாரென்றொருவர் பெயர் காணப்படுகின்றது. இவர்கள் இருவரும் பாடியவெல்லாம் பாலைத்திணையா யிருத்தலானே இருவரும் ஒருவரே யெனவும் ஏடெழுதுவோர் மிகையால் பெயர் வேறுபட்ட தெனவும் ஊகிக்கலாயிற்று. கருவூர் சேரநாட்டகத்துளது. இவர் கூறிய குறைநயப்பு நுண்ணுணர்வினோரை இனிது மகிழ்விக்கும்; (அகம். 180) இவர் சேரமான் கோக்கோதையையும் அவனது வஞ்சி மூதூரையும் பாராட்டிக் கூறியுள்ளார்; (அகம். 263) இவர் பாடியனவாக நற்றிணையில் 180 ஆம் பாடலொன்றும், அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
46. கள்ளிக்குடி பூதம் புல்லனார்
இவரது இயற்பெயர் புல்லன்; பூதன் தந்தை பெயர்போலும்; ஊர் கள்ளிக்குடி. இப்பெயர்கொண்ட வூர் பலநாடுகளிற் பல இருத்தலால் இவர் ஊர் இன்னதென்றறியக்கூடாதாயினும் இவர் பாலைத்திணையையே சிறப்பித்துப் பாடியிருத்தலால் இவர் நீர்நாட்டினர் அல்லரென்று மட்டும் தெரிகின்றது. இவர் பாடியனவாக நற்றிணையில் 333 ஆம் பாடல் ஒன்றும், குறுந்தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
47. காசிபன் கீரனார்
இவரது இயற்பெயர் கீரன். கடைச் சங்கத்திலே தலைமை பெற்றிருந்த நக்கீரரின் வேறென்பது தெரிய ஏனைக் கீரர்களெல்லாம் ஒவ்வோரடை மொழி கொடுக்கப்பட்டமையின், இவரும் அவ்வாறே காசிபன்கீரனாரெனப்பட்டார். காசிபனென்றதனால் இவர் காசிப கோத்திரத்தினராகிய அந்தணரென் றறியப்படும். இவர் முல்லைத்திணையைப் பாடியுள்ளார்;