வம்பமாரியென்று தலைவி கருதி ஆற்றுமாறு தோழி மருட்டி, மழையை நோக்கிக் கூறுவதாக இவர் பாடியது மிக்க நயமுடையதாகும். இவர் பாடியது நற். 248ஆம் பாட்டு.
48. காஞ்சிப் புலவனார்
மாங்குடி மருதனாரென்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நிலையாமை யறிவுறுத்தவேண்டி மதுரைக்காஞ்சி பாடியதனால் மதுரைக்காஞ்சிப் புலவனெனவும் காஞ்சிப் புலவனெனவுங் கூறப்பெறுவாராயினார்; மாங்குடி கிழாரென்பவருமிவரே. இவர் வேளாண் மரபினர். மேற்கூறிய நெடுஞ்செழியனது அவைக் களத்துப் புலவராய் அவனைப் பாடி மகிழ்வித்து வைகுவாராயினர். (புறம். 24) ஒரு காலத்துச் சேரனும் சோழனும் மதுரையை முற்றியபொழுது இளைஞனாகிய நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுவான், "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக" (புறம். 72) என்று இவரைப் பாராட்டிக் கூறினானெனின் இவருடைய மேன்மையும், கல்வி கேள்விகளினுயர்வும் நம்மனோரால் அளவிடப்படுங்கொல்லோ? இவர் பாடிய மதுரைக்காஞ்சியைப் படிப்பவர்க்கு இவரது ஆற்றல் விளங்கும். பின்பொரு பொழுது வாட்டாற் றெழினியாதனைப் பரிசில் வேண்டிப் பாடி அவனால் ஆதரிக்கப்பெற்று மீண்டு மதுரையை யடைந்து வைகுவாராயினார்; (புறம். 336) இவர் எல்லாத்திணையும் புனைந்து பாடவல்லவர். நெடுஞ்செழியன் போரிலே உள்ளஞ்செலுத்தி அவ்வழியே யொழுகுவானை நன்னெறிப்படுத்தி மறுமைக்காய் வேள்வி முதலியவை செய்யும்படி பண்ணினவர் இவரே; (புறம். 26) கடற்கரையில் மகளிர் விளையாட்டயவர்தனை விளங்கக் கூறியுள்ளார்; (நற். 123) இவர் பாடியனவாக, மதுரைக் காஞ்சியகவல் ஒன்றும், நற்றிணையில் 123 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலொன்றும், புறத்திலாறும், திருவள்ளுவமாலையிலொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. தஞ்சாவூர்ச்சில்லா திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள மாங்குடி மருதவனமென இரண்டு ஊர்கள் ஒன்றையொன்று அடுத்துள்ளன. அவற்றுள் முன்னது இவரூரும் பின்னது இவரால் நாட்டப்பட்டதும் போலும்.
49. காப்பியஞ் சேந்தனார்
இவரது இயற்பெயர் சேந்தனென்பதே; ஏதேனுங் காப்பியஞ் செய்ததனால் இவ்வடைமொழி கொடுக்கப்பெற்றாரோ அன்றேல் காப்பிய மென்பது இவருடைய ஊர்தானோ தெரியவில்லை; காப்பிய மகனாய சேந்தனாரென்றும் கொள்ளலாம். இவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; தலைமகன் வருவதற்குரிய பல்லி சொல்லுதல் முதலாய நிமித்தங்கள் பலவற்றைச் சேர விரித்துக் கூறியுள்ளார்; இவர் பாடியது நற். 246 ஆம் பாட்டு.
50. காமக்கணிப் பசலையார்
இவர் மதுரைக் காமக்கணி நப்பசலையா ரெனவுங் கூறப்படுவர்; பெயர்க் காரணத்தாற் பெண்பாலாரென்பது தெளிவு; காமக்கணி காமாட்சி என்றும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. சங்கத்தார் வடசொற்களை அவற்றிற்கு நேராகிய தமிழ்மொழியாலே கூறுதல் வழக்காகவுடையவர்;