நக்கீரனார் திருமுருகாற்றுப்படையுள் ஜம்புநதியிற் பிறந்தமையால் ஜம்பூநதமெனப் பெயர் பெற்ற தங்கத்தினை அப் பெயராற் கூறாது "நாவலொடு பெயரிய பொலம்" என்றார்;இதனை நோக்கியறிக. (மகளிர்க் குண்டாகும் பசலையைப் பாராட்டிப் பாடினமையின் இவர் பசலையா ரெனப்பட்டார் போலும்; அத்தகைய பாடல் இவர் பாடியது கிடைத்திலது.) இவர் பாலை முல்லை வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; தலைவர்காள் நிலையில்லாத பொருள் காரணமாக நுங்காதலியரைக் கைவிடாதிருங்கோளென்று குயில் கூவாநிற்குமென்று இளவேனிலை வருணிக்கிறார்; (நற். 243) இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
51. காரிக் கண்ணனார்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனா ரென்பவரிவரே; வணிகர் மரபினர்; தொல். பொருள், மரபு 74 ஆம் சூத்திர வுரையில் பார்க்க. அகம் 123 இல் "கழைமாய் காவிரிக் கடன் மண்டு பெருந்துறை" எனத் தம்மூர்த் துறைமுகத்தைச் சிறப்பித்தலானும், இவர் அவ்வூராரேயெனத் துணியப்படும். இவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனை அவன் வென்றிச் சிறப்புக்கூறி மகிழ்வித்தார்; (புறம். 57) ஒருகாற் சேரலன் சேனாபதி பிட்டங் கொற்றனிடஞ் சென்று அவனைப் புகழ்ந்து தமது வறுமையைக் கூறிப் பரிசில் பெற்றனர்; (புறம். 169) அதனால் மிக்க மகிழ்ச்சிகொண்டு மீட்டும் அவன்கொடைத் தன்மையைப் புகழ்ந்து இயன்மொழி வாழ்த்துக் கூறினார்; (புறம். 171) சோழன் பெருந்திருமா வளவனும், பாண்டியன் 58) ஆஅய் அண்டிரனைப் பாராட்டிக் கூறியிருக்கிறார்; (நற். 58) இவர் பாலைத்திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; பிரிந்த காதலனைக் கருதி வருந்தினாயுமில்லையென்று தலைவியைத் தோழி கடிந்து கூறுவதாக உரை மாறுபடப் பாடியுள்ளார்; (நற். 237) இவர் பாடியனவாக நற்றிணையில் 273 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலிரண்டும், புறத்திலைந்தும், திருவள்ளுவமாலையிலொன்றுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
52, காவன்முல்லைப் பூதனார்
இவரது இயற்பெயர் பூதனென்பதே காவன்முல்லை புறத்திணைக்குட்பட்ட ஒருதுறை; புறப்பொருள் வெண்பாமாலை வாகைப் படலத்துட் கண்டுகொள்க. அத் துறையைப் பாடினமையின் காவன்முல்லைப் பூதனார் எனப்பட்டார். இவர் பாலைத்திணையைப் பலவாறு புனைந்து பாடியுள்ளார். காதலன் சென்ற சுரநெறி கொடியதென்று வருந்திய தலைவியை அந்நெறி மழைபெய்து நலனுடையதாய் இராநின்றதென்று தோழி ஆற்றுவிப்பதாக இவர் கூறியது இன்சுவையதாகும்; (நற். 274) இவர் பாடியனவாக நற்றிணையில் 274 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலைந்துமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.