53. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
அகம். 271 இல் "சென்று நீர் வணிகரா" என்று கூறியதனால் இவரை வணிக மரபினரென்று கொள்கின்றோம். இவர் அவியனென்னும் கொடையாளியையும் அவனது மலையையுஞ் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்; (அகம். 271) வாகைப்பூவை மயிலின் குடுமிக்கு உவமை கூறியுள்ளார்; (குறுந். 347) பெரும்பாலும் பாலைத்திணையைப் புனைந்து பாடியுளர். இவர் பாடியனவாக நற்றிணையில் 389 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலிரண்டுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
54. கிடங்கில், காவிதி கீரங்கண்ணனார்
இவரது இயற்பெயர் கண்ணனாரென்பதே; கீரன் தந்தையின் பெயர்போலும்; காவிதிப்பட்டம் பெற்றமையின் உழுவித்துண்ணும் வேளாண் மரபினராவார். கிடங்கில் என்பது நடுநாட்டகத்துள்ள திண்டிவனம்; இஃது ஓய்மா (ஏறுமா) நாட்டு நல்லியக்கோடன் ஆட்சியுட்பட்டிருந்தது; "கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற்கோமான்" - சிறு பாணாற்றுப்படை. 140 மற்றுமிவ்வூர் "கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத், தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார்- கிடங்கில், வளையாற் பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா, யிளையாடன் கண்ணொக்குமென்று" என்று பொய்கையாழ்வாராற் சிறப்பித்துப் பாடப்பெற்றது. இக்கீரங் கண்ணனார் நெய்தல் குறிஞ்சி முதலிய வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; பிரிந்தாரை யொறுக்கு மாலைக்காலத்தியல்பும் இரவுறு துயரமும் விளங்கப் பாடியுள்ளார், (நற். 218.) இவர் பாடியனவாக நற்றிணையில் 218 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
55. கிடங்கில், காவிதிப்பெருங் கொற்றனார்
கொற்றனெனப் பலரிருத்தலின் அவர்களின் வேறென்பது தெரிய இவர் பெருங் கொற்றனெனப்பட்டார். இவர் முல்லைத்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 364 ஆம் பாட்டு.
56. கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சோகோவனார்
இவர் இயற்பெயர் கோவனென்பதே. சோ என்னும் அடைமொழி பற்பலர் பெற்றிருக்கிறார்கள்; இன்னகாரணத்தால் இவ்வடைமொழி கொடுக்கப்படுவதென்பதும், இன்னபொருளென்பதும் விளங்கவில்லை. இவர் வேளாண் மரபினர். கிள்ளிமங்கலம் பாண்டி நட்டகத்ததோரூர். கிள்ளிமங்கலங்கிழார் என ஒருவர் குறுந்தொகையிற் கூறப்படுகிறார். அவர்க்கு இச் சோகோவனார் புதல்வராவார்போலும். இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; தலைவி படுங் காமத்துயரையறிந்த தோழி நாம் காவல் கடந்து நாணமுதலாயின வொழித்துக் காதலனது ஊர் வினவிச் செல்லுவேமோவென்று கூறுவது வியக்கத்தக்கது. இவர் பாடியது நற். 365 ஆம் பாட்டு.
57. கீரங்கீரனார்