வருகிறாரென்று தோழி கூறுவது இனிமை தாராநிற்கும். இவர் பாடியது நற். 78
58. குடவாயிற் கீரத்தனார்
கீரத்தனாரெனப்படுபவரும் இவரே. குடவாயில் சோழநாட்டின் கண்ணதாகிய தஞ்சாவூர்ச்சில்லா நன்னிலந் தாலுகாவைச் சார்ந்ததொரு பெரிய வூர். இவர் தம்மூரைத் "தண்குடவாயிலன்னோள்" (அகம். 44) "கொற்றச் சோழர் குடந்தை வைத்து" (அகம். 60) "தேர்வண்சோழர் குடந்தை வாயில்" (நற். 379) எனச் சிறப்பித்துக் கூறாநிற்பர். இதனுள் குடவாயி லென்பதனைக் குடந்தையென மேலையோர் திரித்தன ரென்பர் நச்சினார்க்கினியர்; (தொல்.பொருள். 388 உரை) இவர் முன்பொருகாலத்துச் சோழனொருவன் சேரநாட்டகத்துச் சென்று கழுமலமென்னும் நகரை முற்றித் தன் சேனாபதி பழையன் என்பானைப் பகைப்புலத்தவர் சேனாபதி கணையனென்பான் கொல்லக்கண்டு பொறாது அவனையும் அவ்வூரையுங் கைப்பற்றிய கதையைக் கூறுகின்றவர் அப் போரில் வந்த மற்றுமுள்ள சேனாபதிகளையும் பிற சிற்றரசர்களையும் எடுத்துக்கூறிச் செல்லுகின்றார்; (அகம். 44 ) சோழரது திரவியசாலை குடவாயிலின்கணுள்ள தென்று குறிப்பிக்கிறார்; அகம். 60. [திரவியசாலை மிக்க போர் வீரராற் காக்கப்பட்டுள்ளதெனவும் காவன் மிக்குடைமையிற் சிறைச்சாலையும் குடவாயிலின்கட் கட்டப்பட்டுள்ள தெனவும் கொண்டு சோழன் செங்கணான் சேரன் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டானென்று களவழியினும் புறத்துங் கூறியிருப்பதை ஆய்ந்து கொள்க.] நன்னனது ஏழில்மலை இவராற் பாராட்டப்பட்டுள்ளது; (அகம். 345) சோழநாட்டிலுள்ள அன்னியுந்திதியனும் போர் செய்யத் தொடங்குகையில் இடையில் சமாதானஞ் செய்யச் சென்ற நாகப்பட்டினந் தாலுகா வைப்பூரிலுள்ள எவ்வி யென்பவனைச் சிறப்பித்துக் கூறுகிறார்; (அகம். 366) உறையூரும் காவிரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன; (அகம். 385).
இவர் பெரும்பாலும் பாலைத்திணையையும் சிறுபாண்மை மற்றைத் திணைகளையும் புனைந்து பாடியுள்ளார்; மருதநிலத்துப் பள்ளர் பொலிதூற்றிய கூளம். உப்புப்பாத்தியிற் படிதலின் நுளையர் போந்து மற்போர் புரியக் கண்ட முதியோர் இருவரையும் கைபிணி விடுத்து நுளையர்க்குக் குடக்கள் கொடுத்து விடுத்தார் என்று திணைமயக்கங் கூறி மகிழ்விக்கிறார்; (அகம். 166) வினைவயிற் சென்று மீண்டு வந்த தலைமகனைக் கண்ட காதலி தான் முற்றுப்பெறாத கோலத்தோடு ஓடிவந்து முயங்குவதாகக் கூறி யார்க்குஞ் சுவையமிழ் தூட்டுகிறார்; (நற். 42) இவர் பாடிய பாங்கி பேதைமை யூட்டற்றுறை ஆராயத்தக்கது; (நற். 379)
இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு (27, 42, 212, 379) பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் பத்துமாகப் பதினேழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
59. குண்டுகண் பாலியாதனார்
இவர் ஆதன் என்னும் இயற்பெயருடையவர்; பாலி இவரது ஊர்; ஆழ்ந்த கண்ணுடைமையிற் குண்டுகணென்னும் அடைமொழி கொடுக்கப்பட்டார்.