இவர் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதனைப் பாடிப் பரிசில் பெற்றவர்; (புறம். 387) குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; முகம்புகுகிளவி பாடியவருள் இவருமொருவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 220 ஆம் பாடலொன்றும், புறத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
60. குதிரைத்தறியனார்
குதிரைத்தறியென்பது ஓரூர்போலும்; செய்தி விளங்கவில்லை; இவர் பாலைத்திணையைப் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 296 ஆம் பாட்டு.
61. குளம்பனார்
குளம்பு என்னு மூரினராதலிற் குளம்பனாரெனப்பட்டார்; இஃது ஊர் பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார்; இவர் பாடியது நற். 288 ஆம் பாட்டு.
62. குறமகள் குறிஎயினி
இவர் பெண்பாலார்; எயினியென்னு மியற்பெயருடையார்; இவர் பாடலில் "நின்குறிப்பெவனோ தோழி யென்குறிப்பு" எனக் குறிப்பெனுஞ்சொல்லை அடுக்கிக் கூறிய சொற்சிறப்பால் இவர் குறிப்பெயினியாரெனப்பட்டார்; இவர் பெயர் ஏடுகளிற் குறியெயினி யென்றிருந்ததனால் அவ்வாறே பதிப்பிக்கப்பட்டது. புறத்தில் (157) குறமகள் இளவெயினி என்றொருவர் காணப்படுகிறார்; குறிப்பெயினியாரே இளம்பருவத்தே பாடத்தொடங்கியதால் இளவெயினி யெனப்பட்டாரென்று ஊகிக்கலாம். குறவர் குறிஞ்சித் திணைக்குரியராதலின் அதற்கேற்ப இவரும் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 357 ஆம் பாட்டு.
63, குன்றியனார்
இவரது பெயர்க்காரணம் விளங்கவில்லை. குறுந்தொகையில் மேலைக் கடற்கரைத் தொண்டியைச் சிறப்பித்திருக்கிறபடியால் இவர் சேரநாட்டவர் என்று தோன்றுகின்றது; (குறு. 238) இவர் களவு கற்பாகிய இருவகை ஒழுக்கத்தையும் நெய்தற்றிணையிலமைத்துப் பலவாறு பாராட்டிப் பாடி உள்ளார்; மாலைப்பொழுதை அழகாக வருணிக்கிறார்; (நற். 117) இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (117, 239) பாடலும், குறுந்தொகையில் ஆறும், அகத்தில் இரண்டுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
64. குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார்
இவர் வேளாளர் மரபினர். குன்றூர் என்று பல ஊருளவாதலின் இவரூர் இன்னதென்றறிய இயலாது. இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 332 ஆம் பாட்டு.
65. கூடலூர் பால்கண்ணனார்
இவர் நீர்நாட்டின்கண்ணுள் கூடலூரின ராக வேண்டும்; மருதத்திணையிற் பாணனை மறுத்துக்கூறுந் துறையையே சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடிய பாட்டு இரண்டு; நற். 200, 380.