66. கூற்றங் குமரனார்
இவர் இயற்பெயர் குமரனென்பது. கூற்றன் தந்தை பெயர்; கூற்றனுடைய குமரனார் கூற்றங் குமரனாரென்றாயிற்று; (தொல். எழுத்து 350) இவர் முகம்புகுகிளவி பாடியவரில் ஒருவர். குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 244 ஆம் பாட்டு.
67. கொட்டம்பலனார்
இவர் கொட்டம்பலம் என்னும் ஊரினர். இவர் பாடலில் குறக்குறுமாக்கள் தாளங்கொட்டும் என்னுந் தொடரிற் கொட்டுமென்னுஞ் சொற் சிறப்பானே கொட்டம்பலவன் எனப்பட்டாரெனினுமாம். எனின் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என அகத்திலும் புறத்திலும் வருதலின் கோட்டம்பலமென வோரூருண்டு எனவும் அதனால் கோட்டம்பலவனாரென்பது ஊர்பற்றி வந்த பெயரெனவுமறிக. கழைக்கூத்தி கயிற்றில் நடக்கின்ற வழக்கு அக்காலத்தும் உண்டென்று இவர் பாடலான் அறிப்படுகிறது; (நற். 95)இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். தலைமகன் தன்னெஞ்சம் கொடிச்சி கைப்பட்டு விட்டதெனவும், அவள் விட்டாலன்றிப் பிறரால் விடுத்தற் கரியதெனவும் கூறுவதாகப் பலபடப்புனைந்து கூறியுள்ளார்; (நற். 95) இவர் பாடியது நற். 95 ஆம் பாட்டு.
68. கொள்ளம்பக்கனார்
இவர் இயற்பெயர் பக்கனென்பது. கொள்ளம் - ஓரூர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். உடம்பு வேறுபட்டமை பற்றி நற்றாய் வினாவியதற்குக் காதலனொடு கூட்டமுண்மையை வினவியதாகக் கொண்டு வரை நாடனை அறிந்திலேன் கண்டதுமில்லை, அவனோடு சுனையாடினது மில்லையே யென்று கூறிவிட்டனையே! இனி என்னாகி முடியுமோ? என்று தோழி கூற்றாக இவர் பாடியது வியக்கத்தக்கது. இவர் பாடியது நற். 147 ஆம் பாட்டு.
69. கொற்றங் கொற்றனார்
இவர் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனாரென அகத்திற் கூறப்படுவர்; வேளாண் மரபினர். மாற்றூர் பலவுளவாதலின் இவரூர் இன்ன இடத்ததென்று அறியக்கூடவில்லை. கொற்றன் கொற்றனெனற்பாலது நிலைமொழியீற்று அன் விகுதி கெட்டு அம்முச் சாரியை புணர்ந்தது; (தொல். எழுத்து 350) இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; காவிரியின் வடபாலுள்ள சிறுகுடியென்னும் ஊரினையும் அதனை ஆட்சி புரிந்த பண்ணனென்பவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்; (அகம். 54) இவர் பாடியனவாக நற்றிணையில் 259 ஆம் பாடல் ஒன்றும் அகத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
70. கொற்றனார்
செல்லூர்க் கொற்றனார் எனவும் செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் எனவும் கூறப்படுபவர் இவரே. செல்லூர் சோழநாட்டுக் கீழைக் கடலருகிலுள்ளது. பரசுராமமுனிவர் பெருவேள்வி செய்த வூரிதுவே. இக் கொற்றனார் பெரும்பூதனார் என்பவரின் புதல்வர்.