வணிகர் மரபினர். இவர் மருதம், நெய்தல், பாலை இவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகனைப் பரத்தையர் பலர்கூடிக் கைகளைப் பற்றியீர்த்தலும் அவரிடைப்பட்டு மயங்கும் அவனது நிலைமையை விளங்கக் கூறியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 30 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையிலொன்றும் அகத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
71. கோக்குளமுற்றனார்
இஃது ஊர்பற்றி வந்த பெயர். குளமுற்றம் என்பது ஓரூர். "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" எனப் புறப்பாட்டின்கண் வருதலானும் இவ்வூருண்மை தெளிக. கோவென்னும் உரிமை பெற்ற உழுவித் துண்ணும் வேளாண் மரபினர்; நெய்தலையும் முல்லையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்; தலைமகன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த இடமும் அவன் தலைவியோடு கடலாடிய துறையும் முதலியவற்றை நினைந்து தலைமகள் புலம்புவதாகச் சுவைபயப்பப் பாடியுள்ளார். (நற். 96) இவர் பாடியனவாக நற்றிணையில் 96 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
72. கோட்டியூர் நல்லந்தையார்
இது நல்லன் தந்தை நல்லந்தையாரென முடியும். தொல். எழுத்து 348 இல் "துவர" என்றதனால் முடிக்க. பாண்டிய நாட்டகத்ததாகிய திருக்கோட்டியூர் என்பது இதுவே. இவர் நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 211 ஆம் பாட்டு.
73. கோண்மா நெடுங்கோட்டனார்
இவரைப்பற்றி யாதும் விளங்கவில்லை. இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பரத்தையிற் பிரிந்த தலைமகன் தனக்குப் புதல்வன் பிறந்தானென்ப தறிந்து பகலில்வர வெள்கி இரவிற் கள்வன்போல வந்தானென்று வியக்குமாறு கூறாநிற்பர்; (நற். 40) இவர் பாடியது நற். 40 ஆம் பாட்டு.
74. கோவூர் கிழார்
இஃது ஊர் பற்றி வந்த பெயர். இவர் வேளாண் மரபினர். சோழன் நலங்கிள்ளியையும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும் பாடி (31, 32, 33, 41) அவர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிற நாளில் நலங்கிள்ளி யென்பான் ஆவூரை முற்றுகை செய்ய அக்காலத்து உள்ளே அடைத்திருந்த சோழன் நெடுங்கிள்ளியை அதனைத் திறந்து போர் செய்ய வரும் வண்ணம் பாடினர்; (புறம். 44) அந்நெடுங்கிள்ளி அதனைத் திறந்து நலங்கிள்ளிபால் விட்டுச்சென்று உறையூரையடைந்து அங்கு வைகினன். ஆவூரைக் கைப்பற்றிய நலங்கிள்ளி சென்று உறையூரையு முற்றுகை செய்தான்; (புறம். 45) அந்நாளில் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூரினுட் புகுந்த இளந்தத்தனை ஒற்றுவந்தானென்று நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்தபொழுது அவனைக் கொல்லாதபடி தடுத்துப் பாடி உய்யக்கொண்டார்; (புறம். 47) பின்பு பகை முற்றாவண்ணம் முற்கூறிய சோழரிருவரையும் ஒற்றுமைப்படுத்திப் போரை விலக்கி நெடுங்கிள்ளியைப் பலவாறு புகழ்ந்து பாடி அப்பால் கிள்ளிவளவன்பால் வந்தனர். அம் மன்னன் யாதோ வொரு