காரணத்தால் மலையமான் மக்களை யானையின் காலில் வைத்து இடறும்படி கட்டளையிடக் கண்டு அவனைப் பாடி அம் மக்களை உய்வித்தார்;
(புறம். 46) முற்கூறிய அரசர்களைப் பாடிய பாடல்கள் மிக்க சுவைபயப்பன. இவர் நற்றிணையிற் கூறிய உள்ளுறை வியப்புடையது.
இவர் குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 3" ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், புறத்தில் பதினைந்துமாகப் பதினேழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
75. கோளியூர்கிழார் மகனார் செழியனார்
இவர் வேளாண் மரபினர்; ஏனைய வெளிப்படை. இவர் பிற யாதுஞ் செய்ததாக இதுவரையில் தெரியவில்லை. இவர் குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 382 ஆம் பாட்டு.
76. சல்லியங் குமரனார்
இவர் உறையூர் சல்லியங் குமரனாரெனவுங் கூறப்படுவர். கூற்றங் குமரனார்க்குக் கூறிய விதியே இங்குங் கொள்க. இவர் பாடலில் சோழநாட்டு அரிசிலாற்றையும் அதனருகிலுள்ள அம்பல் என்னும் ஊரையும் கிள்ளிவளவனையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். இதனால் கிள்ளிவளவன் காலத்தவராவார் போலும்; (நற். 141) பாலையையும் மருதத்தையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 141 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
77. சாத்தந்தையார்
சாத்தன் தந்தை சாத்தந்தை என்றாயிற்று : (தொல்,எழுத்து 347) இவர் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் போரிற் கொன்ற சோழன் தித்தன் மகன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியின் வீரச்செயலைச் சிறப்பித்துப் பாடியவர்; (புறம். 80) இவர் மகன் கண்ணஞ்சேந்தனாரே பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய திணைமொழி ஐம்பது பாடியவர். இச் சாத்தந்தையார் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார் : இவர் பாடியனவாக நற்றிணையில் 26 ஆம் பாடலொன்றும் புறத்தில் நான்குமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
78. சிறுமோலீகனார்
இவரைப்பற்றி யாதும் விளங்கிலது; குறிஞ்சியைப் பாடியுள்ளார். தலைவி காமநோயால் வருந்துவதறிந்த அன்னை வினாவியதற்குக் கூறிய விடை ஆராயத்தக்கது. இவர் பாடியது நற். 61 ஆம் பாட்டு.
79. சிறைக்குடி ஆந்தையார்
ஆதன் தந்தை ஆந்தை, இவர் மனைவியோடு வாழ்நாளிற் பொருள் வேண்டிக் காதலியைப் பிரிய நேர்ந்ததுகண்டு நெஞ்சை நோக்கிப் புணர்ந்திருப்பிற் பொருள் அடைவதரிதெனவும் பிரியிற் புணர்ச்சியில்லை யெனவும் பலவாறு கூறி வருந்துவாராயினார்; (நற். 16) அதுகண்ட அவர் காதலி பிரிவர்போலுமென்று கடுந்துனிகொண்டு பிரியின் இறந்துபடுவேன் எனக்கூறி மாழ்கினள்; புலவர்பிரான் காதலியை நோக்கி "நீ பூப்பெய்திய மூன்றுநாட் பிரிந்துறைவது ஒரு யாண்டளவு