பிரிந்தாற்போலாகின்ற எனக்குப் பிரிவென்பது எப்படி நேரும்? இது காரணமாக நீ இறப்பின் என்னுயிரும் உடன்போகக் கடவதாக வென்றும், நாமிருவரும் சேர்ந்து வாழாது பிரிந்து ஒருவராக வாழ்வதினும் இறப்பதே நல" மென்றும் வற்புறுத்திக் கூறினார்; (குறு. 57) அங்ஙனம் கூறியதன்றி அவள் கேட்டு இஃதுண்மையென்று கொள்ளுமாறு பூமாலை போன்ற அவளுடைய மேனி தளிரினும் மேதக்கது; முயங்குதற்கு மினிதாயிரா நின்றது;(குறு. 62) வன்மையாக அணைத்து மயங்கும் அத்தகையாளைப் பிரிந்தால் யான் எப்படி மறந்தமைகுவேன் ? (குறு. 132) அத்தகைய நறுந்தண்ணியளைக் கூடுந்தொறும் பிரியகில்லேன்; பிரியின் உயிர் வாழலேன் (குறு. 168) என்று பலபடியாகக் கூறி அவளை மகிழ்வித்தனர். மீட்டும் அவளை நோக்கி "ஒண்ணுதலாய், நின்னைப் பிரியகில்லேன்; இதனை தெளிவாய் காண்" (குறு. 273); "நின்நட்பை விடுகிலேன்" என்று அவள் தெளியுமாறு கூறினார்; (குறு. 300) அவர் பிரிவதில்லை யென்று தெளிவித்தலும் காதலி முன்னையினும் பலபடியாக அவர்பால் அன்புமிக்கு அவ்வண்ணமே ஒழுகுவாளாயினாள். அங்ஙனம் ஒழுகுவதறிந்த ஆந்தையார் உள்ளுருகி, தலைப்புணைக்கொளின் அவளுங் கொள்ளுவள்; யான் யாற்றின் வீழின் உடனே தானும் விழுந்துயிர்விடுந் தன்மையளல்லளோ (குறு. 222) என்று கூறிப் பிரிவென்பதைக் கனவிலும் நினையாதவராய்க் கலந்து முயங்கி மகிழ்ந்துரைவாராயினார். இங்ஙனம் இவர் அழகமைந்த இன்பச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பாடல்கள் விழைவு விடுத்த விழுமியோரையும் விழை வெய்துவிக்குந் தன்மையவாகும். இவர் பாடல்களைப் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகை நூலுட் கோத்தனர். இவர் பாடியனவாக நற்றிணையில் 16 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் எட்டுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
80. சீத்தலைச் சாத்தனார்
சீத்தலை யென்பது ஓரூர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவைபோல. பெருஞ்சாத்தன், பேரிசாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவரியற்பெயர்க்கு ஊர்ப்பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனாரெனப்பட்டது. சீத்தலை யென்னுமூர் திரிசிராப்பள்ளிச்சில்லா பெருமளூர்த் தாலுக்காவிலுள்ளது; திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் றாமோதரனார் பாடலில் "தலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு" என்றிருத்தலானே, அதற்கேற்பச் "சீத்தலை-சீப்பிடித்த தலை" யென்று கதைகட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினு மிருக்கலாம். அதுபற்றி்ச் சீப்பிடித்தல் ஒருதலையன்மையின் சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. இவர் மதுரையிற் சென்று தம் குடும்ப வாழ்விற்காகக் கூலங்களைக் கொண்டு விற்று வியாபாரஞ் செய்து வந்தமையிற் கூலவாணிகன் சாத்தனாரெனவுங் கூறப்படுவார்; வணிக மரபினர்; பௌத்த மதத்தினர். சிலப்பதிகாரத்திற் கூறிய கண்ணகியொடு மதுரை மாதெய்வம் வந்து வினவியபொழுது வெள்ளியம்பலத்திற் சயனித்திருந்தவிவர் அங்குப் பேசியவற்றைக் கேட்டிருந்து அத்தெய்வம் கண்ணகியை விடுத்து நீக்கியபின்னர் அக் கண்ணகி அறியாதபடி பின்சென்று சேரநாடு புகுந்து சேரன் செங்குட்டுவனுக்கு நிகழ்ந்ததைத் தெரிவித்து அவன் தம்பி இளங்கோவடிகள் அக் கண்ணகி வரலாறாகிய சிலப்பதிகாரத்தைப் பாட அச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய