மணிமேலை துறவைத் தாமே பாடி வெளியிட்டார். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடினவர்; (புறம். 59) இவர் முல்லையொழிய ஏனைய நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார். அடி மரங்களில் சுரிமூக்கு நொள்ளைகள் மழைக்காலத்து ஏறி ஓட்டிக்கொள்ளுவதைக் கூறியுள்ளார்; (அகம். 53.) வெளிமான் கொம்பின வாழைப்பூ வுதிர்ந்த தாற்றோடு உவமித்துள்ளார்; அகம். 134 யாவரும் வியக்குமாறு உள்ளுறை கூறியுள்ளார்;(அகம். 306, 320) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (36, 127. 339) பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் ஐந்தும், புறத்திலொன்றும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
81. செங்கண்ணனார்
மதுரைச் செங்கண்ணனாரென அகத்திற் கூறப்படுபவர் இவரே. குறிஞ்சித்திணையைப் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 122 ஆம் பாடலொன்றும் அகத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
82. செம்பியனார்
இது சோழர் குடிக்குரிய பெயர். இதனால் இவர் சோழமன்னர் மரபினரென்று தெரிகின்றது. இவர் கிள்ளைவிடுதூதாகக் கூறிய நற்றிணைப்பாட்டு மிகவும் பாராட்டற்பாலது. இவர் குறிஞ்சித்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது நற். 102 ஆம் பாட்டு.
83. சேகம்பூதனார்
ஏடுகளிற் சேகம்பூதனாரென் றிருத்தலானே இருந்தவாறே பதிப்பிக்கப்பட்டது. சேந்தம் பூதனாரென்பவரும், மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனா ரென்பவரும் இவரே. மதுரைக் கடைச்சங்கத்து ஏடெழுதுவோரா யிருந்தவர். பெரும்பாலும் குறிஞ்சியையும் முல்லையையும் நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார். இவர் மாலைப்பொழுதைச் சிறப்பிப்பது கேட்போர் மனத்தைப் பிணியாநிற்கும்; (நற். 69) யானையை மலைப்பாம்பு பற்றிப் புரட்டுநெறியென நெறியினது ஏதங் கூறாநிற்பர்; (நற். 261) கழுதைமேல் உப்புப் பொதிகொண்டு செல்லும் வழக்கை விளக்கிக் கூறுகிறார். (அகம். 207) இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (69, 261) பாடலும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் இரண்டுமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
84. சேந்தங்கண்ணனார்
இவர் இயற்பெயர் கண்ணனார். சேந்தன் என்னுந் தந்தை பெயரின் அன் விகுதி கெட்டு அம்முச் சாரியை புணர்ந்து சேந்தங்கண்ணனார் என்று ஆயிற்று; (தொல், எழுத்து 350) இவர் நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; கேட்போர் மனத்தைப் பிணிக்குமாறு இவர் நாரைவிடுதூது கூறியுள்ளார்; (நற். 54) இவர் பாடியது நற். 54 ஆம் பாட்டு.
சேந்தம்பூதனார்
மேலே (83) சேகம் பூதனார் பார்க்க.