xxxix


85. தங்கால், ஆத்திரேயன் செங்கண்ணனார்

    செங்கண்ணனெனப் பலருளராதலின் அவரின் இவர் வேறென்பது தெரிய "ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும், யாருஞ் சார்த்தியவையவை பெறுமே" (தொல், பொருள். மர. 76) என்ற விதிப்படி ஊருங் குலமுங் கூட்டித் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனெனப்பட்டார். தங்கால் என்பது திருத்தண்காவென இக் காலத்து வழங்கப்படுகிறது; இது ஸ்ரீவில்லிபுத்தூருக் கருகிலுள்ளதொரு வைணவத்தலம். ஆத்திரேயன் - ஆத்திரேய கோத்திரத்துப் பிறந்தவன்; எனவே இவர் அந்தணர் மரபினராவர். முகம்புகு கிளவி பாடவல்லவருள் இவருமொருவர்; குறிஞ்சித்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய உள்ளுறை வியப்புடையது. இவர் பாடியது நற். 386 ஆம் பாட்டு.

  
86. தங்கால், பொற்கொல்லன் வெண்ணாகனார்

    பொற்கொல்ல னென்றமையானே இவர் கம்மாளரென்பது வெளிப்படை. ஊர் முற்கூறிய திருத்தண்காலே. அகம் முதலாகிய சில ஏடுகளிலும் பொற்கொல்ல னென்பது பிறழ்ந்து பூட்கொல்லனென்றும் பூட் கொற்றனென்றும் எழுதப்பட்டுள்ளது. இஃது ஏடெழுதுவோரால் நேர்ந்த வழு பூட்கொல்லனென்பது பொருள் பொருந்தாமையால் பூட்கோலவன் (பூண்கட்டிய தடிக்கொம்புடையவன்) எனத் திருத்தப்பட்டது போலும், பூட்கொற்றனை முடக்கொற்றனென்று திருத்தவுமாயிற்று. (பூட்கொல்லன் பூண்செய்யும்கொல்லன் அஃதாவது பணித்தட்டான் என்று பொருள்படலாம்) இவர் பாடலிற் சிலவற்றிலே தமது மரபைப் "பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப" (நற். 313) எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகன் என ஒருவர் அகத்திற் காணப்படுகிறார். திருத்தண்காலிலிருந்த இவர் மதுரைச் சங்கமேறி அங்கு வைகியதனால் மதுரைப்பொற் கொல்லன் வெண்ணாகன் எனப்பட்டாரோ அறியக்கூடவில்லை. ஆயினும் மதுரையை நீக்கித் தங்காலென்றதனளவே இவர் பாடல் கணக்கிடப்படுகிறது. இவர் குறிஞ்சியையும் பாலையையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 313 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் ஒன்றும், அகத்தில் இரண்டும், புறத்திலொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
87. தனிமகனார்

    இவர் பாடலுட் "பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே" என உவமை கூறிய அருந்தொடர் மொழியே இவர்க்குரிய பெயராகி வழங்கலாயிற்று; இயற்பெயர் புலப்படவில்லை. பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். என் நெஞ்சம் அவர்பாற் சென்றொழிந்தது; உடம்பு மாத்திரம் பாழ்காத்திருந்த தனிமகன் போன்று இங்கு இராநின்றதெனத் தலைவி கூற்றாக வியக்குமாறு கூறியுள்ளார். இவர் பாடியது நற். 153 ஆம் பாட்டு.

  
88. தாயங்கண்ணனார்

    சோழநாட்டு எருக்காட்டூர்த் தாயங் கண்ணனா ரென்பர் இவரே. எருக்காட்டூர் தஞ்சாவூர்ச்சில்லா, நன்னிலந் தாலுகாவில், காவால குடிக்குக் கீழ்பாலுள்ளது. இவர் பெயர் ஏடெழுதுவோரால் பிறழ்ந்தெழுதப்பட்டுத்