xl


தையங் கண்ணனாரெனவும் கதையங் கண்ணனாரெனவும் காணப்படும். காடுவாழ்த்துப் பாடியவர் இவரொருவரே. "பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து"க்கு நச்சினார்க்கினியர் இவர் பாடலையே உதாரணமாகக் கொண்டார்; (புறம். 356, பிற்பகுதி) இவர் சேரலரது சுள்ளியாற்றில் யவனர் வந்து பொன் கொடுத்து மிளகுப்பொதிவாங்கி ஏகும் வியாபாரச்சிறப்பையும், சேரலனிடத்திருந்த பொற்படிமையைப் பாண்டியன் போர் புரிந்து பெற்றதையும், பரங்குன்றத்தின் சிறப்பையும் விளங்கக் கூறியுள்ளார்; (அகம். 149), தொண்டையர் வேங்கடமும், சேரர் கொல்லியும், சோழர் காவிரியும் உறையூரும் இவராற் பாராட்டப் பட்டுள்ளன (அகம். 213, 337.) எழினியென்பான் இவராற் பாடப் பெற்றுள்ளான். (அகம். 105,) இவர் நெய்தல், பாலை குறிஞ்சிகளின் வளங்களைச் சிறப்பித்துப்பாடும் ஆற்றலுடையார். குராவரும்பைப் பாம்பின் பல்லோ டுவமித்துள்ளார்; (அகம். 237) இதனையே எடுத்தாண்டனர் கம்பரும்; "குராவரும் பனைய கூர்வாள் எயிற்றுவெங்குருளை" -கார்காலப் படலம், செய்யுள், 59. இவர் பாடியனவாக நற்றிணையில் 219 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் ஒன்றும், அகத்தில் ஏழும், புறத்தில் ஒன்றுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
89. தும்பிசேர் கீரனார்

    இவர் பெயர் தும்பிசேர் கீரன் : கீரன் என்பது இயற்பெயர்; சேர்- அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால் இவர் பெயரைச் சேர்கீரனா ரென்று பதிப்பிக்கலாயிற்று. தமது பாடலிலே தும்பியை-வண்டை நோக்கி "கொடியைவாழி தும்பி" (நற். 277) எனவும், "அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி" (குறுந்தொகை, 392) எனவும் விளித்து அதனைப் பலவாகப் பாராட்டிக் கூறலின், இவர் தும்பிசேர் கீரனாரெனப்பட்டார். இவர் எல்லாத் திணையையும் பாடியுள்ளார். தலைவனிடஞ் சென்று தன்நிலை உரைத்தாயல்லையே என்று தும்பியைத் தலைவி முனிந்து கூறியதாக இவர் பாடியது இனிய சுவையுடையதாகும்; (நற். 277) தலைவனை முயங்காது கண்ணாலே நோக்கிமட்டும் மகிழ்தற்கு மக்கள் நடைவண்டி யிழுத்து மகிழ்தலை உவமை கூறியுள்ளார்; (குறு. 61) வண்டுவிடுதூது இவர் பாடியது ஆராயத்தக்கது; (குறு. 277) இவர் பாடியனவாக நற்றிணையில் 277 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் நான்குமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
90. துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்

    இவர் செய்திபற்றி யாதும் விளங்கவில்லை. தமது பாடலில் வணிகனைக் கிளவித்தலைவனாக அமைத்துக் கூறியதனால் இவர் வணிகமரபினரோ என்றையங் கொள்ளப்படுகின்றது. இவர் பாலையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 289 ஆம் பாட்டு.

  
91. தூங்கலோரியர்

    இவர் தழும்பனையும் அவனது ஊணூரையும் பாடியதாக "வாய்வாட்டமிழகப் படுத்த இமிழிசை முரசின், வருநர் வரையாப் பெருநாளிருக்கைத், தூங்கல் பாடிய வோங்குபெரு நல்லிசைப், பீடிமகி ழுறு துணைப் பெரும்பெயர்த் தழும்பன், கடிமதில் வரைப்பின் ஊணூரும்"