எனக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (அகம்.226 ) இல் புகழ்ந்து கூறியுளர்; அங்ஙனம் இவர் பாடிய பாடல் காணப்பெறாமையின் அழிந்ததுபோலும். இவர் மருதத்திணையையும் பாலைத்திணையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 60 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையில் இரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
92. தேய்புரிப்பழங்கயிற்றனார்
இவர் பாடலில் நெஞ்சமும் அறிவும் மாறுகொண்டிழுத்தலால் என்னுடம்பு இரண்டு யானையாலிழுக்கப்பட்டு தேய்புரிப் பழங்கயிறு அற்றொழிவதுபோல அழியவேண்டியதுதானோ வென்று கூறிய அருந்தொடர் மொழியாகிய உவமையே இவர்க்குப் பெயராயிற்று; இயற்பெயர் புலப்படவில்லை. இவர் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 284 ஆம் பாட்டு.
". தேவனார்
இவர் நெய்தற்றிணையைப் பாடியுள்ளார்; சோழரது ஆர்க்காட்டைச் சிறப்பிக்கிறார்; (நற். 227) இவர் பாடியது நற், 227 ஆம் பாட்டு.
தொண்டைமான் இளந்திரையன்
முற்கூறிய (15) இளந்திரையனைப் பார்க்க
".தொல்கபிலர்
இவர் பாடிய நற். 114 இல் கரையைப் "புள்ளித் தொல்கரை" என்று கூறிய அடைச்சிறப்பால் தொல்கபில ரெனப்பட்டார். குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பலபடியாகப் புனைந்து பாடியுள்ளார். பல உள்ளுறைகள் அடுக்கிக் கூறியுளா;் (நற். 328) மடலேறுவேனென்னுந் தலைவன் கூற்றாக இவர் கூறியது வியப்புடையதாகும்; (குறு. 14) இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு (114, 276, 328. 399) பாடல்களும், குறுந்தொகையில் ஒன்றும், அகத்தில் ஒன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
95. நக்கண்ணையார்
இவர் பெண்பாலார்; பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணை எனவுங் கூறப்படுவர்; நக்கண்ணை-சுலோசனை என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. அரசர்க்கு மகட்கொடை நேரும் வணிகமரபினர். உறையூர் வீரைவேண்மான் வெளியன் தித்தனின் மகன் போர்வைக் கோப் பெருநற் கிள்ளி யென்னுஞ் சோழன் தன் தந்தையோடு பகைத்து நாடிழந்து புல்லரிசிக் கூழுண்டு வருந்தியவன் ஆமூர் மல்லனைப் போரில் வென்று கண்ட இந் நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம்மணந்து முயங்க விரும்பி தம் காதன் மிகுதியையும், அவனை அணைத்து முயங்குதற்கு அவையத்தார் காண்பரேயென்றஞ்சுவதையும், அவனைப் பலகாலும் காணப்பெறினும் முயங்காமையினாலே தம்மேனி பசலை பூத்ததையும், பலவாறாக விரித்துக் கூறி வருந்துவாராயினார்; (புறம். 83, 84) இன்னும் தாம் சிலம்பொலிப்ப ஓடிச்சென்று தம்மனையின்கணுள்ள பனையடியில் மறைந்துநின்று நோக்கித் தாம் தம்முடைய வளையுங்கலையும்