முதலானவை தோற்கும் ஆண்மை உடையன் அவன் எனவுங் கூறியுள்ளார்;
(புறம். 85) இவர் நெய்தலையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார்; சோழர் மரபின் அழிசியினது ஆர்க்காட்டைச் சிறப்பிக்கிறார்;
(நற். 87) இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு
(16, 87) பாடல்களும் அகத்திலொன்றும் புறத்தில் மூன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
96. நக்கீரர்
இவர் மதுரை நக்கீரரெனவும், கணக்காயனார் மகனார் நக்கீரரெனவும் கூறப்படுவார். இயற்பெயர் கீரனார்; ந-சிறப்புப்பொருளுணர்த்தும் இடைச்சொல். ஒரு காலத்துச் சங்கப்புலவரில் இவர் தலைபெற்றிருந்ததுமுண்டு. இறையனார் அகப்பொருளுக்கு உரைசெய்தவர் இவரே. (இப்பொழுதுள்ள அவ்வுரை இவர் கூறியதனை வரன்முறையாகப் பாடங்கேட்டுவந்து ஈற்றில் இளம்பூரணர் எழுதிவைத்ததென்று ஊகிக்கப்படுகின்றது) திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை இவ்விரண்டனையும் இவரே இயற்றியருளினார். எல்லா நிலங்களினுஞ்சென்று அவற்றின் இயற்கையமைப்பை ஆராய்ந்து அவ்வந் நிலங்களிலே பிறந்து வளர்ந்தவரினும் வல்லவராய்ச் செய்யுளியற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் மகனே கீரங் கொற்றனாரென்பர். இந் நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளிலே கொண்டான் என்னுங் குயவன் பட்டிமண்டபமெய்தி வடமொழியே சிறப்புடையதென்றும் தமிழ் சிறப்புடைய தன்றெனவு மிழித்துக் கூறினான். அதுகேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள்ளுகின்றது; தமிழை இகழ்ந்த நின்னை வடமொழியாலே இறக்கும்படி கூறுகிறேன்; அது நின்னை இறக்கச் செய்யாதாயின் தமிழ் தீதேயென்று சொல்லி "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி, பரண கபிலரும் வாழி - அரணிலா, ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான், ஆனந்தஞ் சேர்கசுவா கா" என்று கூறலும் அவன் அவ்விடத்தே வீழ்ந்து உயிர்துறந்தான். (ஆனந்தம்-சாக்காடு) அதனை நோக்கிய ஏனையோர் வந்து வேண்ட "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய; அந்தண்பொதியி லகத்தியனா ராணையாற், செந்தமிழே தீர்க்கசுவா கா" என்றொரு வெண்பாப்பாட அவன் உயிர்பெற்றெழுந்தானென்ப.
இந் நக்கீரனார் பிரபுவாகிய அருமனையும் அவனது சிறுகுடியென்னும் ஊரையும் பாராட்டிப் பாடியுள்ளார்; (நற். 367) பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்றதனை விளங்கக்கூறியிருக்கிறார்; (அகம். 36) வள்ளலாகிய பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகை செய்திருந்தபொழுது அடைபட்டிருந்த பாரி, புலவர் பெருமகனாகிய கபிலரது கட்டளைப்படி, கிளிகளை விடுத்து நெற்கதிர்களைக் கொண்டுவந்து உண்டிருந்ததைச் சுருக்கிக் கூறியுள்ளார்; (அகம். 78) வைப்பூர் எவ்வி இடையிலே தூதாகச் சென்று சமாதானப்படுத்தவும் அடங்காது, அன்னியும் அழுந்தூர்த் திதியனும் போர்செய்ததனைக் கூறியுள்ளார்; (அகம். 126) கார்த்திகை மாதத்துக் கார்த்திகைக்குப் புதுவதாக மணம்புரிந்துகொண்ட மருமகளை அழைத்து வந்து அவளால் முதலில் பால் அடுப்பில் வைக்கச்செய்வதும், கார் நெற்கதிர்களை மண்படாமற் கொணர்ந்து அவலிடித்துப் பொரித்து நிவேதிப்பதும், அன்று வீடுகளிலும் தெருக்களிலும் விளக்குகளை வைத்துக் கொண்டாடுவதுமாகிய