xliii


கார்த்திகைவிழாவை இவர் விரித்துக் கூறுவது படிப்பார்க்கு வியப்பைக் கொடா நிற்கும்; (அகம். 141) மற்றும் இவர் கிள்ளிவளவனையும், இடையர் தலைவன் ஆகிய கழுவுளென்பானையும், வடுகர்தலைவன் எருமை யென்பானையும், குட்டுவன் சேரலையும், திரையனையும், பழையன் மாறனையும் ஆங்காங்குப் பாராட்டிக் கூறுவதுடன் அவரவர்க்குரிய காவிரிப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், தொண்டி, குடநாடு, பவித்திரி, மதுரை, முதலாய பதிகளையுஞ் சிறப்பிக்கின்றார்; (அகம். 205, 253, 290, 340, 346) தூங்கலோரியர் பாடிய தழும்பனது ஊணூரென ஊணூரைப் பாராட்டிக் கூறியுள்ளார்; (அகம். 226) இவர் பாடிய அகப்பாட்டுக்களில் பெரும்பாலும் சேர சோழபாண்டியர் சிற்றரசர் இவர்களில் யாரையேனுங் கூறாது விடுவதில்லை. இன்னும் இவராற் புறத்திற் பாடப்பெற்றோர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனும் (புறம். 56) சோழநாட்டுப் பிடவூர்க் கிழார் மகன் பெருஞ்சாத்தனும், (புறம். 395) [பிடவூர் - திருச்சிராப்பள்ளிக்கு கீழ்பாலுள்ளது.] இவர் சிவபெருமானொடு வாது கூறியதாகத் திருவிளையாடல் கூறாநிற்கும். இவர் பாடியனவாகப் பத்துப்பாட்டில் இரண்டும், நற்றிணையில் ஏழு (31, 167, 197, 258, 340, 358, 397) பாடல்களும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் பதினேழும், திருவள்ளுவமாலையில் ஒன்றும், புறத்தில் மூன்றுமாக முப்பத்தெட்டுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவையேயன்றிப் பதினொராந் திருமுறையில் இவர் செய்த பிரபந்தஞ் சிலவுள. யாப்பருங்கல விருத்தியுரையில் நக்கீரர் நாலடி நாற்பது என ஒன்று கூறப்படுகிறது; இதுகாறும் அஃது அச்சில் வந்திலது.

  
97. நப்பாலத்தனார்

    ந- சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல், பாலத்தன் இயற்பெயர். இனி பாலத்தனாரெனக் கூறப்படுபவரும் இவரேயாவர். யாப்பருங்கல மேற்கோளுள் நப்பாலத்தனார் சூத்திரமெனச் சில சூத்திரங் காட்டப்படுதலின் இவர் யாப்பிலக்கணஞ் செய்துள்ளாரென்று அறியப்படுகிறது. இவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; கடையெழு வள்ளலில் ஒருவனாகிய கொல்லியாண்ட வல்வில்லோரியைப் பாராட்டிக் கூறியுள்ளார்; (நற். 52) இப் பாலைநிலத்தைப் படைத்தோன் இதில் மெல்ல நடந்து காண்பானாகவென்று சுரத்தினருமை கூறியுள்ளார். (நற். 240) இவர் பாடியனவாக இரண்டு பாட்டுக் கிடைத்திருக்கின்றன. நற். 52, 240.

  
98. நம்பி குட்டுவனார்

    குட்டநாட்டை ஆட்சி புரிந்தமையின் சேரர் பரம்பரையார் குட்டுவரெனப்பட்டார்; ஆதலின் இவர் சேரவமிசத்தினரேயாவர். நம்பி - வீரத்தன்மையுடையவன். இவர் நெய்தல் வளத்தைப் பெரும்பாலும் பாராட்டிப் பாடியிருப்பதொடு குறிஞ்சியையும் பாடியுள்ளார். தலைமகனது மலைமேற் பட்ட காற்றுவந்து வீசின் இறைமகளது ஆகத்துள்ள பசலை தணியும் என்று இவர் காதற் சிறப்புக் கூறியது சுவையுடையதாகும். : (நற். 236) ஆம்பல் மலர்வது நாக்கை கொட்டாவி விடுதல் போலுமென்று கூறியுள்ளார்; (நற். 345) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (145, 236, 345) பாடல்களும் குறுந்தொகையில் இரண்டுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.