xliv


99. நல்லந்துவனார்

    இவர் அந்துவனாரெனவும் ஆசிரியர் நல்லந்துவனாரெனவும் கூறப்படுவர். இவர் இயற்பெயர் அந்துவன்; "அந்துவன் பாடிய சந்துகெழுநெடுவரை" (அகம். 59) என மதுரை மருதனிள நாகனார் கூறுமாற்றானுமறிக. அந்துவனெனப் பிறருமுளராகலின் இவர் நல்லந்துவனாரெனவும், அந்தணராதலின் ஆசிரியர் நல்லந்துவனாரெனவும் கூறப்பட்டார். ஆசிரியர் என அடைமொழிகொடுத்துக் கூறுவது அந்தணர்க்கே யன்றிப் பிறர்க்குக் கூறும் வழக்குப் பண்டில்லை. கலித்தொகை இவர் செய்ததாக அதன் பதிப்பாசிரியர் கூறாநிற்பர். இவர் அகப்பொருட்சுவையைக் கலிப்பாக்களாற் பலபடப் புனைந்து யாவரும் வியக்கப் பாடும் ஆற்றலுடையவர். பரிபாடலில் நீர்விளையாட்டணி இவர் பாடியவை. பயிலுந்தோறும் அளவிலா மகிழ்ச்சி யெய்துவிக்குந் தன்மையன. அன்றிப் பிரிந்த தலைவி கையறவு கொண்டு புலம்பும் பாடல்கள் கருதுழிக் கன்மனத்தையும் உருகச் செய்யும்; (கலித்தொகை) இவர் எல்லாத் திணையையும் விரித்துப் பாடுந் திறமுடையவர். நம்மை நினைந்து குன்றமும் அழாநிற்குமென்று கேட்போ ரிரங்குமாறு கூறியுள்ளார்; (நற். 88) நாழிகை வட்டிலாற்பொழுதறிவதல்லது ஞாயிற்றை யறியப்படாத மழைக்காலமெனக் கார்காலத்தைச் சிறப்பித்துக் கூறியுள்ளார்; (அகம். 43) இதனைக் "காலமறிவுற்றுணர்தல் கன்னலள வல்லால் , மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ" என்றார் கம்பரும். (கார்காலப் படலம், செய்யுள், 73) கலித்தொகையை நீக்கி, இவர் பாடியனவாக நற்றிணையில் 88 ஆம் பாடல் ஒன்றும் அகத்தில் ஒன்றும் பரிபாடலில் (முதல் 22 பாடல்களுள்) நான்கும் (6, 8, 11, 20) திருவள்ளுவமாலையில் ன்றுமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
100. நல்லாவூர் கிழார்

    இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாளர்; இயற்பெயர் எழுதப்படவில்லை. இவர் தாம் பாடிய "உழுந்து தலைப்பெய்த" என்னும் அகம், 86 ஆம் பாட்டில் முற்காலத்து நிகழ்த்தும் வதுவைச்சடங்கை விரித்துக் கூறியுள்ளார்; குறிஞ்சித் திணையைப் புனைந்து பாடியுளார்; இவர் பாடியனவாக நற்றிணையில் 154 ஆம் பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
101. நல்லூர்ச் சிறுமேதாவியார்

    இவர் நன்பலூர்ச் சிறுமேதாவியா ரெனவுங் கூறப்படுவர்; அந்தண ரென்றூகிக்கப்படுகிறார்; முல்லைத் திணையில் நரி ஊளையிடுகின்ற பேரொலி முதைப்புனங் காவலர் ஊதுங் கொம்பினொலியோடு ஒருங்கிசைக்கு மென்று வியப்புறக் கூறியுள்ளார்; (அகம். ") இவர் முல்லையையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுளர். இவர் பாடியனவாக நற்றிணையில் 282 ஆம் பாடலொன்றும், அகத்திலொன்றும், திருவள்ளுவமாலையிலொன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
102. நல்விளக்கனார்

    இவர் நல்விளக்கு என்னுமூரினர்; இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார், இவரது பாடலிற் கூறிய உள்ளுறையும் இறைச்சியும் இனிமைதரா நிற்கும். இவர் பாடியது நற்றிணையில் 85 ஆம் பாட்டு.